சேர்வாரி ஆற்றில் சேதமடைந்த கதவணை மதகு அடைப்புகளை புதுப்பிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


சேர்வாரி ஆற்றில் சேதமடைந்த கதவணை மதகு அடைப்புகளை புதுப்பிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2018 11:15 PM GMT (Updated: 17 Jun 2018 7:43 PM GMT)

பொறையாறு அருகே திருவிடைக்கழி சேர்வாரி ஆற்றில் சேதமடைந்த கதவணை மதகு அடைப்புகளை புதுப்பிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடி திருவிடைக்கழி சாலையில் சேர்வாரி ஆற்றில் பழமையான கதவணை மதகு (சட்ரஸ்) உள்ளது. அதில் உள்ள 4 மதகில் 3 மதகு அடைப்பு பலகைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. அதில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் மகிமலையாற்றின் மூலம் 850 ஏக்கர் நிலங்கள் சாகுபடி பெற தேவையான தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்்பட்டுள்ளது. இந்த கதவணை மதகு அடைப்பு பலகைகளை புதுப்பிக்க வேண்டும் என்று தில்லையாடியை சேர்ந்த விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தரங்கம்பாடி தாலுகாவில் கடைமடை பகுதியான தில்லையாடி கிராமம் முற்றிலும் விவசாயத்தை நம்பியே உள்ளது. மகிமலையாற்றின் மூலம் தில்லையாடி கிராமத்தில் 850 ஏக்கர் பரப்பளவில் ஒரு போகம் சாகுபடி செய்து வருகிறோம். பாசனத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க திருவிடைக்கழி சேர்வாரி ஆற்றில் ஒரு கதவணை உள்ளது. அதில் உள்ள 3 மதகு அடைப்பு பலகைகள் முற்றிலும் சேதமடைந்து உடைந்து உள்ளதால் தேவையான தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் தண்ணீர் கடலுக்கு போகும் சூழ்நிலை உள்ளது.

இதனால் நேரடி விதைப்பு மற்றும் ஆற்று பாசனத்தை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு தோறும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பொதுப்பணித்துறையினர் உடனடியாக 3 மதகு அடைப்பு பலகைகளை புதிதாக அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story