தவுட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் இல்லாததால் வெட்ட வெளியில் சமையல், கட்டிடம் கட்ட பெற்றோர்கள் வேண்டுகோள்


தவுட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் இல்லாததால் வெட்ட வெளியில் சமையல், கட்டிடம் கட்ட பெற்றோர்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Jun 2018 3:00 AM IST (Updated: 18 Jun 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

தவுட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் இல்லாததால் வெட்ட வெளியில் சமையல் செய்யப்படுகிறது. எனவே சமையல் செய்வதற்காக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

அந்தியூர்,

அந்தியூரை அடுத்த தவுட்டுப்பாளையத்தில் இருந்து கரட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் தவுட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், கரட்டுப்பாளையம், புதுமேட்டூர், சின்னதம்பிபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 390 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் இந்த பள்ளிக்கூடத்தில் மதியம் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள். இதற்காக பள்ளிக்கூடத்தின் ஒரு ஒதுக்குப்புறத்தில் வெட்ட வெளியில் மண் தரையில் கற்களை கொண்டு அடுப்பு அமைக்கப்பட்டு சமையல் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகையில், ‘வெட்ட வெளியில் மண் தரையில் சமைப்பதால் சாதம், குழம்பு போன்றவற்றில் காற்றில் பறந்து வரும் தூசுகள் விழுந்துவிடுகின்றன. மேலும் இந்த பள்ளியின் வழியாகத்தான் ஏராளமான லாரிகளில் செங்கல் கொண்டு செல்லப்படுகின்றன.

அவ்வாறு கொண்டு செல்லப்படும்போது லாரிகளில் இருந்து செங்கல் மண் தூசுகளும் விழுந்து விடுகின்றன. அதுமட்டுமின்றி இந்த பள்ளிக்கூடத்தின் வழியாக வாகன போக்குவரத்து அதிக அளவில் இருப்பதாலும் தூசுகள் அடிக்கடி பறந்து வரும்.

இதன்காரணமாக சுகாதாரமற்ற முறையிலேயே மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. எனவே இந்த பள்ளிக்கூடத்தில் சத்துணவு சமைப்பதற்காக புதிய கட்டிடம் கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story