போலீசாக நடித்து ரூ.7 லட்சம், 40 பவுன் நகை அபேஸ்: நிதிநிறுவன அதிபரிடம் மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கோவை வாலிபர் கைது


போலீசாக நடித்து ரூ.7 லட்சம், 40 பவுன் நகை அபேஸ்: நிதிநிறுவன அதிபரிடம் மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கோவை வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2018 3:30 AM IST (Updated: 18 Jun 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

நிதிநிறுவன அதிபரிடம் போலீசாக நடித்து ரூ.7 லட்சம், 40 பவுன் நகையை மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கோவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கணபதி,

கணபதி அருகே உள்ள ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 56), நிதிநிறுவன அதிபர். கடந்த 2013–ம் ஆண்டு இவரது வீட்டிற்கு 7 பேர் கொண்ட கும்பல் தங்களை போலீசார் எனக்கூறி அவரது வீட்டை சோதனையிட்டனர். பின்னர் வீட்டில் வைத்திருந்த ரூ.7 லட்சம், 40 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு தான் வீட்டில் சோதனை நடத்தியது போலீஸ் அதிகாரிகள் இல்லை என்பது பழனிச்சாமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக பத்மநாபன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பத்மநாபனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் கோவை டி.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 35) என்பவருக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் திருப்பூர் பகுதியில் நடந்த குற்ற சம்பவ வழக்கில் கார்த்திக் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து கோவை மாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அவர்கள் கோர்ட்டு அனுமதி பெற்று சாய்பாபா காலனி குற்றப்பிரிவு போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இதில் பல்வேறு தகவல்களை அவர் கூறினார். குறிப்பாக தங்க நகைகளை கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் அடமானம் வைத்து பணம் பெற்றதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலின் படி போலீசார் கேரள மாநிலம் சென்று விசாரித்தனர். அந்த அடகுக்கடை மூடப்பட்டு பல மாதங்களை கடந்து விட்டது தெரியவந்தது. இதனால் தங்க நகைகளை மீட்க முடியாமல் போலீசார் திரும்பினர். எனினும் விரைவில் தங்க நகைகளை மீட்கவும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைக்கு பின்னர் கார்த்திக் கோவை கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story