ராகுல்காந்தியின் பிறந்தநாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும், காங்கிரசாருக்கு நாராயணசாமி வேண்டுகோள்
ராகுல்காந்தியின் பிறந்தநாளை நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று காங்கிரசாருக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
முதல்–அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளம் மூலம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டியது நமது கடமை. அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் இது.
அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்கவேண்டும். எதிர்காலத்தில் அவரை பிரதமராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். ராகுல்காந்தியின் பிறந்தநாளை புதுவை மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடும் கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது.
இதை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள், ஏழைகளுக்கு அன்னதானம், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும்.
புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள், ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.