சூலூர் அருகே செயல்பட்ட குட்கா தொழிற்சாலை அதிபர் வெளிநாடு தப்பி ஓட்டம்
சூலூர் அருகே செயல்பட்ட குட்கா தொழிற்சாலை அதிபர் வெளிநாடு தப்பி சென்று விட்டார். அவருடைய பாஸ்போர்ட்டை வைத்து எந்த நாட்டில் தலைமறைவாக இருக்கிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் குட்கா தொழிற் சாலை செயல்பட்டு வந்தது. இதை அறிந்த கோவை மாவட்ட போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி சோதனை நடத்தி போலீசார் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். மேலும் அதற்குள் இருந்த ஏராளமான குட்கா மற்றும் போதை பாக்குகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்த தொழிற்சாலையின் உரிமையாளரான டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் (வயது 48), தொழிற்சாலை மேலாளர் ரகுராமன் (45), அங்கு வேலை பார்த்த வடமாநிலங்களை சேர்ந்த ராம்தேவ் (24), சொக்கிராவ் (29), அஜய் (30) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் அமித்ஜெயினை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அது போன்று குட்கா தொழிற்சாலை நடத்துவதற்கு பல வழிகளில் உதவியதாக கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான தளபதி முருகேசன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து தலைமறைவான தொழிற்சாலை அதிபர் அமித்ஜெயினை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் டெல்லியில் முகாமிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது டெல்லியில் வசித்து வரும் அமித் ஜெயினின் தாயார், அவருடைய சகோதரர் அனில் ஜெயின் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அமித் ஜெயின் வெளிநாடு தப்பிச்சென்றதாகவும், எந்த நாட்டுக்கு சென்று உள்ளார் என்பது தெரியாது என்றும் கூறினார். இதையடுத்து போலீசார் அவர் எங்கு சென்று உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:–
அமித் ஜெயின் வெளிநாடு தப்பி சென்றதாகவும், எந்த நாட்டுக்கு சென்றார் என்பது தெரிய வில்லை என்றும் அவருடைய சகோதரர் கூறினார். எனவே அவர் கூறியது உண்மையா? இல்லை என்றால் தனது சகோதரரை போலீசார் பிடித்து விடக்கூடாது என்பதற்காக போலீசாரை திசைதிருப்புகிறாரா என்பது தெரியவில்லை. ஆனாலும் அமித் ஜெயினின் பாஸ்போர்ட்டை வைத்து அவர் எந்த நாட்டுக்கு சென்று உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒருவேளை அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று இருந்தாலும், அவர் நாடு திரும்பும் போது பிடிக்க வசதியாக அனைத்து விமான நிலையங்களுக்கும், அமித் ஜெயினின் பாஸ்போர்ட் நகல், புகைப்படத்தை அனுப்பி வைக்க உள்ளோம். மேலும் அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அறிந்ததும், சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.