ஊட்டி மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து பலியான 8 பேரின் குடும்பத்துக்கு ரூ.51 லட்சம் நிவாரண நிதி
ஊட்டி மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து பலியான 8 பேர் குடும்பத்துக்கு ரூ.51 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலைகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி–குன்னூர் மலைப்பாதையில் மந்தாடா என்ற பகுதியில் கடந்த 14–ந் தேதி அரசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்துக்கு போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சமும், முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும் என தலா ரூ.7 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும் பலியான 2 பேர் குடும்பத்துக்கு அரசு ஆணையின் படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல்–அமைச்சர் அறிவித்த ரூ.2 லட்சமும், போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2½ லட்சம் என தலா ரூ.4½ லட்சம் வீதம் மொத்தம் ரூ.51 லட்சம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் சிறப்பாக இயங்க அரசு மூலம் ரூ.65 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் இந்தியாவிலேயே விபத்துகள் குறைவு, சரியான தகவல் பரிமாற்றங்கள் போன்றவற்றில் தமிழ்நாடு மாநிலம் முதல் இடம் வகிக்கிறது. தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடப்பாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்துக்கு 39 பஸ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 13 புதிய பஸ்கள் உடனடியாக ஊட்டி பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. மேலும் ஊட்டி சுற்றுலா நகரம் என்பதால் கர்நாடகா மாநில பஸ்களை போன்று, தூங்கும் வசதியுடன் கூடிய 2 பஸ்கள் ஊட்டி–பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பஸ்களின் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் ஒழுகுவதை தடுக்க தார்பாய் சீட்டுகள் போடப்பட்டு, அதன் மீது சீட் அமைக்கப்படும். அரசு போக்குவரத்து கழகத்தில் போதுமான உதிரி பாகங்கள் இல்லை என்று கூறுவது தவறானது. எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அதுபோன்ற தவறான தகவலை மக்கள் இடையே தெரிவித்து வருகின்றனர். அனைத்து போக்குவரத்து கழகத்திலும் தேவையான உதிரி பாகங்கள், கூடுதல் டயர்கள் இருக்கின்றன. விபத்தில் இறந்த மற்றும் காயம் அடைந்தவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று, அதற்கான இழப்பீடு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க தமிழகத்திலேயே முதல் முறையாக முதல்–அமைச்சர் உத்தரவின்படி, போக்குவரத்துக்கழகத்தின் மூலமே இழப்பீடு மற்றும் நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 12 ஆயிரம் பஸ்கள் மலைப்பகுதியை சார்ந்து இயக்கப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதி என்பதாலும், வளைவுகளில் சிரமம் இல்லாமல் இயக்கும் வகையில் சிறிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் முழுமையாக தனியார் பஸ்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு, அரசு பஸ்களே இயக்கப்படுகின்றன. இது அரசின் கொள்கையாக உள்ளது.
குன்னூர்–ஊட்டி இடையே எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் சாதாரண பஸ் இயக்கப்படுவதாக புகார் கூறப்படுவதால், சாதாரண கட்டணத்தில் இயக்கப்படும் பஸ்களும், நகர பஸ்களும் குன்னூருக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து வாகனங்களை கண்காணிக்கும் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.