திண்டுக்கல்லில், போலீஸ் நிலையம் அருகே மிளகாய் பொடி தூவி தொழிலாளி வெட்டிக்கொலை


திண்டுக்கல்லில், போலீஸ் நிலையம் அருகே மிளகாய் பொடி தூவி தொழிலாளி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 18 Jun 2018 11:15 PM GMT (Updated: 18 Jun 2018 7:23 PM GMT)

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் போலீஸ் நிலையம் அருகே ஓட, ஓட விரட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த மருதை மகன் குமரேசன் (வயது 28). இவருடைய மனைவி மனிஷா. இந்த தம்பதிக்கு அக்‌ஷயா என்ற பெண் குழந்தை உள்ளது. குமரேசன், திண்டுக்கல் ஆர்.வி. நகரில் உள்ள ஒரு இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் குடைப்பாறைப்பட்டியில் இருந்து ஆர்.வி.நகரில் உள்ள இறைச்சி கடைக்கு தினமும் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல இறைச்சி கடைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது ஆர்.வி.நகர் பகுதியில் ஒரு டீக்கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் அந்த பகுதியில் பதுங்கி இருந்த 4 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென குமரேசனை துரத்தினர். பின்னர் அவரை வெட்ட முயன்றுள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் தப்பி ஓட முயன்றார். எனினும் அந்த கும்பல் விடாமல் அவரை விரட்டிச்சென்று திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள காளியம்மன் கோவில் பகுதியில் சுற்றி வளைத்தது.

இதையடுத்து குமரேசனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அரிவாள், கத்தியால் தலையில் பயங்கரமாக வெட்டியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. கொலை நடந்ததை பார்த்த பொதுமக்கள் கூச்சல் போட்டவாறு சிதறி ஓடினர். இதுகுறித்து அறிந்த குமரேசனின் உறவினர்கள் ஓடிவந்து அவருடைய உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் விரைந்து சென்று குமரேசனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது தெற்கு போலீஸ் நிலையத்தில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த திருப்பூர் பாண்டி என்பவரும், குமரேசனும் இரு பிரிவாக செயல்பட்டு வந்துள்ளனர். இரு கும்பலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி தரப்பை சேர்ந்தவர்கள், குமரேசன் தரப்பை சேர்ந்த ஒருவரை கொலை செய்தனர்.

இதையடுத்து குமரேசன் தரப்பினர் கடந்த 2015–ம் ஆண்டு, பாண்டி தரப்பை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளனர். இதுகுறித்து குமரேசன் மீது திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதனால் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குமரேசன் மீது சிலருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்படுவதாக போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் குமரேசனை அழைத்து ஜாக்கிரதையாக இருக்கும்படி போலீசார் எச்சரித்துள்ளனர். அதை குமரேசன் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


Next Story