அந்தியூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்
அந்தியூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
புதிய தமிழகம் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஐமன்னன் மற்றும் குப்பாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டாம்பாளையம் பவானி பிரிவில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடை அருகே கோவிலுக்கு பெண்கள் தினமும் வந்து செல்கிறார்கள். மேலும் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ள இடத்தின் வழியாகத்தான் மாணவ–மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்கிறார்கள்.
இந்த நிலையில் குப்பாண்டாம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடை நாளை (இன்று) திறக்கப்பட உள்ளது. இந்த கடை திறக்கப்பட்டால் குடிமகன்கள் குடிவித்துவிட்டு தகாத வார்த்தைகள் பேசுவார்கள். மேலும் அறைகுறை ஆடையுடன் ரோட்டில் விழுந்து கிடப்பார்கள்.
இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவ–மாணவிகள் பெரிதும் சிரமப்படுவார்கள். எனவே குப்பாண்டாம்பாளையம் பவானி பிரிவில் அமைக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.