“காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது அ.தி.மு.க. தான்”


“காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது அ.தி.மு.க. தான்”
x
தினத்தந்தி 18 Jun 2018 11:15 PM GMT (Updated: 18 Jun 2018 9:03 PM GMT)

“காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது அ.தி.மு.க. தான்” என திருச்சி பொதுக் கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசினார்.

திருச்சி,

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் திருச்சி விமானநிலையம் அருகில் உள்ள வயர்லெஸ் சாலையில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான குமார் தலைமை தாங்கி பேசினார். மின்சார துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தி.மு.க. துரோகம் செய்து விட்டது. காவிரி நடுவர் மன்றம் அமைக்கவும், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்ததும் அ.தி.மு.க. தான்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது. அந்த குழுவின் அதிகாரம் டெல்லியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறியது. குழுவில் தமிழக உறுப்பினர்களையும் நியமித்து விட்டோம். அடுத்து கர்நாடக அரசும் குழு உறுப்பினர்களை நியமிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். மொத்தத்தில் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது அ.தி.மு.க. தான்.

மக்களை திசை திருப்புவதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபயணம் மேற்கொண்டார். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும், மத்தியில் அங்கம் வகித்த போதும் காவிரி பிரச்சினையில் எந்த குரலும் கொடுக்காமல் தற்போது மக்களை ஏமாற்றுவதற்காக போராட்டம் நடத்தினார்.

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமையை மீட்டெடுத்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான். சாமானியர்கள் ஆட்சி செய்வதை மு.க.ஸ்டாலினால் சகித்து கொள்ளமுடியவில்லை. அதனால் தான் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க. ஒரு போதும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என மக்கள் எங்களிடம் (அ.தி.மு.க.) கூறி வருகிறார்கள். துரோகிகளை நம்பி பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். கழகத்திற்கு யார் திரும்பி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.

ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். டி.டி.வி.தினகரனை நம்பி சென்றவர்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். அடுத்து வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன், முன்னாள் மாவட்ட பாசறை செயலாளர் விஜி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஜாக்குலின் நன்றி கூறினார்.

Next Story