20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் குடிநீர் வரி 60 சதவீதம் உயர்வு


20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் குடிநீர் வரி 60 சதவீதம் உயர்வு
x
தினத்தந்தி 19 Jun 2018 3:41 AM IST (Updated: 19 Jun 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் குடிநீர் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு 2 முறை வசூலிக்கப்படும் குடிநீர்வரி 60 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் பணியை 15-பகுதி அலுவலகங்களாக பிரித்து வழங்குகிறது. இதில் வார்டுக்கு ஒன்று வீதம் 200 பணிமனைகள் மூலம் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள 67 லட்சத்து 27 ஆயிரம் மக்களுக்கு (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) வழங்கி வருகிறது. சென்னை மாநகரில் உள்ள 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதுதவிர 24 ஆயிரத்து 712 தெருக்குழாய்கள் உள்ளன.

இதற்கு தேவையான தண்ணீர் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் மற்றும் விவசாயக் கிணறுகள், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தப்படுகின்றது. பொதுமக்களிடம் இருந்து ஆண்டுக்கு 2 முறை அதாவது 6 மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த குடிநீர் வரி 60 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

கோடிக்கணக்கிலான மதிப்பில் பணிகள்

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகரில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் 914 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குழாய்கள் 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதித்தல், குடிநீர் கொண்டு செல்லும் புதிய பிரதான குழாய்கள் மற்றும் விடுபட்ட தெருக்களுக்கு 310 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய குழாய்கள் பதிக்கும் பணி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நடக்கின்றன. தற்போது 8 லட்சத்து 15 ஆயிரத்து 557 கழிவுநீரகற்று இணைப்புகளை, 4 ஆயிரத்து 250 கிலோ மீட்டர் நீளமுள்ள கழிவுநீர் குழாய்களை வாரியம் பராமரிக்கிறது. கடல்நீரை குடிநீராக்கும் மூன்றாவது நிலைய கட்டுமானப் பணிகள் ரூ.1,200 கோடியில் நடைபெறவுள்ளன. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி உள்ளன.

60 சதவீதம் உயர்வு

2016-2017-ம் ஆண்டுக்கான சென்னை குடிநீர் வாரியத்தின் செலவினம் ரூ.1,084 கோடியே 25 லட்சமாகும். வாரியத்தின் மொத்த வருமானம் ரூ.786 கோடியே 4 லட்சம். இதில், வரிகள் மூலம் ரூ.165 கோடியே 38 லட்சமும் கட்டணங்கள் மூலம் ரூ.280 கோடியே 45 லட்சமும் இதர வருவாய் மூலம் ரூ.53 கோடியே 85 லட்சமும் அடங்கும். அரசு வாரியத்துக்கு ரூ.286 கோடியே 36 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது.

கடல் நீரை குடிநீராக மாற்றும் நிலையத்தில் செலவினங்கள் அதிகரிப்பு, லாரியில் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தின் கீழ் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் அதிகரித்ததால் 20 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது வசூலிக்கப்படும் தொகையில் இருந்து 60 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்படுகிறது.

பெங்களூரு, மும்பை கட்டணம்

கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து ஆயிரம் லிட்டர் குடிநீர் ரூ.50-க்கு வாங்கி, மக்களுக்கு 4 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. சென்னை மாநகரில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் கட்டணம் சராசரியாக மாதத்துக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது.

ஆனால், பெங்களூருவில் ரூ.250-ம், மும்பையில் ரூ.350-ம் வசூலிக்கப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுவதில்லை. இதனால் நிதிச் சிக்கலில் வாரியம் சிக்கித் தவிக்கிறது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 

Next Story