கெடிலம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 56 வீடுகள் இடித்து அகற்றம்: எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 14 பேர் கைது
கடலூர் கெடிலம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 56 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
வெள்ள ஆபத்தை தடுக்கும் வகையில் கடலூர் கெடிலம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கெடிலம் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், குடிசைகளை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
புதுப்பாளையம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிப்பதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிலர் தீக்குளிக்க முயன்றனர். இருப்பினும் ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.
இதில் கடலூர் வன்னியர்பாளையம் காமராஜர் நகரில் கெடிலம் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து 56 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதில் சில வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை இடிப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் தடை விதிக்க மறுத்த ஐகோர்ட்டு, வீடுகளை காலி செய்வதற்கு கடந்த 8-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கியது.
ஆனால் குறித்த காலத்துக்குள் வீட்டின் உரிமையாளர்கள் யாரும் வீடுகளை காலி செய்யவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வீடுகளை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்களுக்கு வருவாய்துறையினர் நோட்டீசு வழங்கினர். இதன் பிறகும் வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை காலி செய்யவில்லை.
இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் நேற்று காலையில் காமராஜர் நகருக்கு சென்றனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
அதிகாரிகளை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வீடுகளை இடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் அவர்களிடம் எடுத்து கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை யாரும் தடுக்க கூடாது என கூறினார்கள்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. இதை கண்டித்து அந்த பகுதி மக்கள் கடலூர் பெரியார் சிலை அருகில் பாரதி சாலையில் நின்று மறியல் போராட்டம் செய்தனர். அப்போது வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 56 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story