சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் கைது


சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் கைது
x
தினத்தந்தி 18 Jun 2018 11:10 PM GMT (Updated: 18 Jun 2018 11:10 PM GMT)

8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிராக பேசியதாக சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மானுசை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காமலாபுரம், தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.

இதேபோல் சேலம்- சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிராகவும் மாவட்டத்தில் சில இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி தும்பிபாடி பகுதியில் விவசாயிகள் நடத்திய கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் கலந்து கொண்டு விமான நிலைய விரிவாக்கம் மற்றும் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிராக பேசினர்.

இதற்கிடையில் தும்பிபாடி கிராம நிர்வாக அலுவலர் மாரி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், அரசுக்கு எதிராகவும் மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

அதன்பேரில் அவர்கள் இருவரும் மீது அரசுக்கு எதிராக பேசுதல்(இந்திய தண்டனை சட்டம் 153), வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல்(இந்திய தண்டனை சட்டம் 189), அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தல்(இந்திய தண்டனை சட்டம் 506 பிரிவு 2), அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுதல்(இந்திய தண்டனை சட்டம் 7 பிரிவு 1) ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் சென்னையில் நடிகர் மன்சூர் அலிகானை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். பியூஸ் மானுசை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை ஓமலூர் அருகே உள்ள ஆர்.சி.செட்டிப்பட்டியில் தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுசை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அவரை போலீசார் ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து நள்ளிரவில் பியூஸ் மானுசை போலீசார் கைது செய்தனர்.

Next Story