ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.
ஈரோடு,
ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவறை எழுத்தாளருக்கான அரசு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பாஸ்கர்பாபு கூறியதாவது:–
ஊராட்சி செயலாளருக்கு அரசு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊதியத்தை வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 899 அதிகாரிகள் வேலை செய்து வருகிறார்கள். இதில் 744 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து உள்ளனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
வருகிற 21–ந் தேதி கோவையில் சங்க பேரவை கூட்டம் நடக்கிறது. இதில் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.