பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அக்காள், தம்பி சாவு


பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அக்காள், தம்பி சாவு
x
தினத்தந்தி 20 Jun 2018 4:30 AM IST (Updated: 20 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி அக்காள், தம்பி பரிதாபமாக இறந்தனர். பிறந்த நாளுக்காக பழனி முருகன் கோவிலுக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ராமு. இவருடைய மகன் அஜித்குமார் (வயது 20). இவர் சூலூர் அருகே காரணம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருடைய உறவினர் சோமந்துறைசித்தூரை சேர்ந்த செந்தில்வேல். இவருடைய மகள் மாலதி (21). இவரும் அஜித்குமார் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அஜித்குமாருக்கு உறவுமுறையில் மாலதி அக்காள் ஆவார்.

அஜித்குமாருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் அவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

இதையடுத்து அஜித்குமார், அவரது அண்ணன் விஜயராகவன், மாலதி, அவரது அண்ணன் முத்துக்குமார் மற்றும் நண்பர்களுடன் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் பழனிக்கு நேற்று காலையில் புறப்பட்டனர்.

அஜித்குமாரும், மாலதியும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னால் மற்ற 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள், பொள்ளாச்சி -உடுமலை ரோடு கோமங்கலம் அருகே சென்ற போது, எதிரே தேனியில் இருந்து ஆனைமலை நோக்கி வந்த லாரி, அஜித்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பின்னால் வந்த உறவினர்கள் இதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர். மேலும் அவர்கள், அஜித்குமார், மாலதி ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் விரைந்து வந்து அஜித்குமார், மாலதி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

விபத்தில் அக்காள், தம்பி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story