திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 20 Jun 2018 4:00 AM IST (Updated: 20 Jun 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நல்லூர்,

திருப்பூர் நகரின் மத்தியில் செல்லும் நொய்யல் ஆற்றின் இரு கரைகளும், குப்பை, கட்டட கழிவு கொட்டும் இடமாக மாறி விட்டது. ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு செல்லும் பிரதான ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ஆற்றின் கரைகளில் கழிவு கொட்டுவதை தடுக்கவும், நொய்யல் கரையோரம் ரோடு அமைக்க வேண் டும் என பல ஆண்டுகளாக திருப்பூர் மக்களின் வேண்டுகோளாக இருந்தது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் பின்னலாடை அனைத்து தொழில் கூட்டமைப்பு இணைந்து நொய்யல் ஆறு தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம் அருகே ஆற்றை தூய்மைபடுத்தி, இருபுறமும் சாலைகள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள திட்டமிட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

மாநகராட்சி பகுதியில் உள்ள 8 கி.மீ. தூரத்திற்கு முதல்கட்டமாக நொய்யல் ஆற்றில் உள்ள வேலி, முட்செடிகள், புதர்கள் மற்றும் கழிவு பொருட்கள் ஆகியவற்றினை அகற்றி சாலைகள் அமைக்க ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் நிதி உதவி வழங்கியுள்ளனர். அதன்படி 2½ கி.மீ, நீளம் வரை வளம் பாலம் முதல் மணியக்காரன் பாளையம் பாலம் வரை ஒருபுறம் சாலை அமைத்து டீ வெள்ளிவிழா நொய்யல் ரோடு பெயர் சூட்டி முடிவடைந்தது. காசிபாளையத்தில் இருந்து மணியக்காரன் பாளையம் வரை 3 கி.மீ, நீளம் டெக்கிக் வெள்ளி விழா ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் நொய்யல் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் சப்-கலெக்டர் தலைமையில் சிறப்பு சர்வே குழு அமைத்து அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கி அறிவுறுத்தப்பட்டு நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பொதுசுத்திகரிப்பு நிலையத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டன.

அங்கிருந்த சாயக்கழிவுகள் மண் கொட்டி மூடப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவருபவர்களுக்கு அரசு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீடுகள் இடிக்க தாமதம் ஏற்படுகிறது.

Next Story