திருப்புவனம் அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி கொலை


திருப்புவனம் அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி கொலை
x
தினத்தந்தி 20 Jun 2018 4:15 AM IST (Updated: 20 Jun 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டியை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ளது மணலூர் ஒத்தவீடு பகுதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையா. இவருடைய மனைவி சீனியம்மாள்(வயது60). இவர்களுக்கு சரவணன்(28) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். சரவணனுக்கும், மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள பூலாங்குளத்தைச் சேர்ந்த பாலாமணி என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னர் கணவன்–மனைவி அப்பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த சில மாதங்களாகவே சரவணனுக்கும், பாலாமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பாலாமணி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சரவணன், தனது தாயார் சீனியம்மாளுடன் சேர்ந்து வசித்து வந்தார்.

இந்தநிலையில் சீனியம்மாள், தனது மகனிடம் மனைவியுடன் சேர்ந்து வாழும்படி அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது தாய்–மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்த சரவணன், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது தாயார் சீனியம்மாள் தலையில் கிரைண்டர் கல்லை போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சீனியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருப்புவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றினர். மேலும் கொலை செய்த சரவணனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story