புதுச்சேரி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் காணாமல் போவார்கள், நாராயணசாமி ஆவேசம்


புதுச்சேரி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் காணாமல் போவார்கள், நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 20 Jun 2018 5:15 AM IST (Updated: 20 Jun 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க கடந்த 4, 5 ஆண்டுகளாக ராகுல்காந்தியை கேட்டுவந்தோம். ஆனால் அதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் நம் அனைவரின் கோரிக்கையையும் ஏற்று அவர் தலைவராகி உள்ளார். வருகிற 2019–ம் ஆண்டு அவர் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய மக்கள் விரும்புகிறார்கள். பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, சர்வாதிகார ஆட்சி இவற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் மக்களுக்கு இப்போது பாதுகாப்பு இல்லை. இந்து, முஸ்லீம் என மக்களை மதத்தால் பிரித்தாளுகின்றனர். ராஜீவ்காந்தி தனது 44 வயதில் பிரதமரானார். ராகுல்காந்தி 48–வது வயதில் பிரதமராக உள்ளார். விரைவில் ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் வருகிறது. அந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அமோக வெற்றிபெறும். கர்நாடக மாநிலத்திலும் 28 எம்.பி. தொகுதியிலும் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து வெற்றி பெறுவோம்.

புதுவையில் பாரதீய ஜனதாவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது. பீகாரில் லல்லுபிரசாத்துடன் சேர்ந்து வெற்றிபெறுவோம். உத்தரபிரதேசத்தை பாரதீய ஜனதா கட்சி நம்புகிறது. அங்கு அகிலேஷ் யாதவ், மாயாவதி, காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டால் பாரதீய ஜனதா காணாமல் போகும். 2019–க்கு பிறகு பாரதீய ஜனதா கட்சியை தேடவேண்டியிருக்கும்.

கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் 2 ஆண்டுகள் வெளிநாட்டிலேயே இருந்துள்ளார். நாட்டில் இருக்கும் நேரத்தில் தேர்தலை பற்றியே சிந்திக்கிறார். இப்படி இருந்தால் நாட்டை எப்படி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார்?

பாரதீய ஜனதா கட்சி மீதான அதிருப்தியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வருகிற தேர்தலின்போது பாரதீய ஜனதாவை தூக்கி எறிவோம். ஜனநாயகம் தழைக்க, சுதந்திரம் பாதுகாக்கப்பட பாரதீய ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும். 2019 காங்கிரசுக்கு பிரகாசமான காலம். அது டெல்லிக்கு மட்டுமில்லை. புதுச்சேரிக்கும் சேர்த்துதான். அப்போது முட்டுக்கட்டை போடுபவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

கட்சியில் பதவி இல்லாதவர்களுக்கு மறுபடியும் பதவி கொடுப்போம். நமக்கு புதுவை மக்கள் நலன்தான் முக்கியம். எனவே சுயநலத்தை சிறிது காலம் தூக்கி எறியவேண்டும். நாங்கள் எப்போதும் உங்களோடுதான் இருப்போம். புதுச்சேரியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல இடையூறு ஏற்படுகிறது. அது யாரால் என்பது உங்களுக்கு தெரியும். அதை தகர்த்து எறிய வேண்டும். இதுபற்றி நான் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசினேன். எனது பேச்சுக்கு ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், பஞ்சாப் மாநில முதல் மந்திரிகள் ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு புதுச்சேரி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.


Next Story