முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது கவிழ்ந்தது பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்தது; 2 பேர் கருகி சாவு


முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது கவிழ்ந்தது பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்தது; 2 பேர் கருகி சாவு
x
தினத்தந்தி 19 Jun 2018 10:15 PM GMT (Updated: 19 Jun 2018 8:43 PM GMT)

முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில் கிளீனர் உள்பட 2 பேர் கருகி செத்தனர்.

சிக்கமகளூரு, 

முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில் கிளீனர் உள்பட 2 பேர் கருகி செத்தனர். மேலும் தீ பரவியதில் 15 வீடுகள் பலத்த சேதமடைந்தது. தீ விபத்து காரணமாக உருவான புகை மண்டலத்தால் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு உண்டானது.

பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது

ஹாசனில் இருந்து பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சிக்கமகளூரு மாவட்டம் கடூர் வழியாக சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவுக்கு சென்ற டேங்கர் லாரியும், மற்றொரு லாரியும் போட்டி போட்டு கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தன. அப்போது கடூர் அருகே ஹிரியாபுரா பகுதியில் முன்னால் சென்ற லாரியை, டேங்கர் லாரி முந்தி செல்ல முயன்றது. அப்போது ஒரு திருப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. டேங்கரில் இருந்த பெட்ரோல் சாலையில் கொட்டியது.

இதில் பெட்ரோல் டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதன்காரணமாக டேங்கரில் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது. லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு தீ பரவி, மளமளவென எரிந்தது.

புகை மண்டலத்தால் மூச்சுத்திணறல்

மேலும் அந்தப்பகுதியில் இருந்த 15 வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. முன்னதாக தீப்பிடித்ததும் அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து உயிர்தப்பினர். அவர்கள், தங்களது வீட்டில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும், தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. கொழுந்துவிட்டு எரிந்த தீயுடன் கரும்புகை வானளவு எழுந்ததால் அந்தப்பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்த புகை 10 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தவர்களுக்கும் தெரிந்தது. மேலும் இந்த புகை மண்டலம் காரணமாக அந்தப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த அஜ்ஜாம்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சிக்கமகளூரு, கடூர், அஜ்ஜாம்புரா பகுதிகளில் இருந்து 8 வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.

15 வீடுகள் சேதம்

தீயணைப்பு படையினர் வீடுகள் மீதும், டேங்கர் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு கரும்புகையுடன் மளமளவென எரிந்ததால் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் பக்கத்தில் உள்ள மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீடுகள் மற்றும் டேங்கரில் பிடித்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இருப்பினும் 15 வீடுகளில் இருந்த துணிமணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், டி.வி.க்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. இதனால் 15 வீடுகளை சேர்ந்தவர்களும் வீடுகளுக்குள் செல்ல முடியாமல் நடுரோட்டில் தவித்தனர்.

2 பேர் சாவு

டேங்கர் லாரி தாறுமாறாக ஓடியபோது, டிரைவர் கீழே குதித்தார். ஆனாலும், அவர் பலத்த தீக்காயமடைந்தார். ஆனால், அந்த லாரியின் கிளீனரான தாவணகெரேயை சேர்ந்த தாதாபீர் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், லாரிக்கு அடியில் ஒருவர் சிக்கி உடல் கருகி செத்திருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து போலீசார் தாதாபீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவருக்கு அதே அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். அந்த லாரியை தூக்கிய பின்னர் தான், லாரிக்கு அடியில் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்பது தெரியவரும். மேலும், 15 வீடுகளிலும் ஏற்பட்ட விபத்தில், யாராவது தீயில் சிக்கி உள்ளனரா? என்பது குறித்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீவிரமாக தேடினார்கள். ஆனாலும் யாரும் தீயில் சிக்கவில்லை என்பது தெரியவந்தது.

15 வீடுகளிலும் தீ பரவுவதை அறிந்ததும், அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியே வந்ததால், அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடூரில் இருந்து ஒசதுர்காவுக்கு பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

உயர் அதிகாரிகள் ஆய்வு

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ஸ்ரீரங்கையா, ஹாசனில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷனின் அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்பு படை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அவர்கள் தீ விபத்து பற்றி அந்தப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் தீயால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story