உல்லாஸ்நகரில் நடுரோட்டில் சிவசேனா கவுன்சிலர் மீது சரமாரி தாக்குதல் பக்கத்து வீட்டுக்காரர் கைது
உல்லாஸ்நகரில் காரை வழிமறித்து நடுரோட்டில் சிவசேனா கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
அம்பர்நாத்,
உல்லாஸ்நகரில் காரை வழிமறித்து நடுரோட்டில் சிவசேனா கவுன்சிலரை சரமாரியாக தாக்கிய பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
சிவசேனா கவுன்சிலர்
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் மாநகராட்சியில் சிவசேனா கவுன்சிலராக இருப்பவர் விகாஷ் பாட்டீல்(வயது32). இவர் அம்பர்நாத் துர்காதேவி பாடா பகுதியில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் கணேஷ் பாட்டீல்(32). இவரும் சிவசேனாவை சேர்ந்தவர். விகாஷ் பாட்டீலுக்கும், கணேஷ் பாட்டீலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில், சம்பவத்தன்று கவுன்சிலர் விகாஷ் பாட்டீல் காரில் தனது நண்பர்கள் உமேஷ், சந்தோஷ் ஆகியோருடன் உல்லாஸ்நகர் பிஸ்லரி தொழிற்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கணேஷ் பாட்டீல் தனது கூட்டாளிகள் 8 பேருடன் இன்னொரு காரில் பின் தொடர்ந்து சென்று அவரது காரை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினார்.
சரமாரி தாக்குதல்
பின்னர் காரில் இருந்து இறங்கிய அவர்கள் கவுன்சிலர் விகாஷ் பாட்டீலை காரில் இருந்து சாலையில் இழுத்துப்போட்டு சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது காரை கற்களை வீசி சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் கவுன்சிலர் விகாஷ் பாட்டீல் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விகாஷ் பாட்டீலின் நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிவாஜி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ் பாட்டீலை உடனடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். அவரது கூட்டாளிகள் 8 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story