திண்டுக்கல் அருகே 14 வயது சிறுமியை உறவினருடன் சேர்ந்து கற்பழித்த காதலன்


திண்டுக்கல் அருகே 14 வயது சிறுமியை உறவினருடன் சேர்ந்து கற்பழித்த காதலன்
x
தினத்தந்தி 21 Jun 2018 4:00 AM IST (Updated: 21 Jun 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே 14 வயது சிறுமியை உறவினருடன் சேர்ந்து காதலன் கற்பழித்துள்ளார். இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தாடிக்கொம்பு,

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், அருகே உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். தாடிக்கொம்பு அழகுசமுத்திரப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் பிரபாகரன் (வயது 19). அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சதீஷ்குமார் (23). பெயிண்டர். இருவரும் உறவினர்கள் ஆவர். சிறுமி வேலை பார்த்த மில்லில், பிரபாகரனும் தொழிலாளியாக வேலை பார்த்தார். அப்போது அந்த சிறுமியும், பிரபாகரனும் காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 15–ந்தேதி வேலை முடிந்து அந்த சிறுமி வேனில் தாடிக்கொம்புக்கு வந்துள்ளார். வேனில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது, சதீஷ்குமார் அந்த வழியாக வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் கையில் இருந்த சிம்கார்டை பிடுங்கிக்கொண்டு சதீஷ்குமார் ஓடிவிட்டார். அடுத்தநாள் மதியம் வேலைக்கு செல்வதற்காக வேனுக்காக அந்த சிறுமி காத்திருந்தார்.

அப்போது, சதீஷ்குமாரிடம் இருந்து சிம்கார்டை வாங்கி தருவதாக கூறி சிறுமியை, பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றார். அவர் அழகுசமுத்திரப்பட்டி அருகே உள்ள ஒரு குளத்துக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றுள்ளார். பின்னர் சதீஷ்குமாருக்கு தகவல் கொடுத்தார். அவரும் அந்த குளப்பகுதிக்கு வந்தார். அங்கு பிரபாகரனும், சதீஷ்குமாரும் மது அருந்தி உள்ளனர்.

இந்தநிலையில் இருவரும் சேர்ந்து அந்த சிறுமியின் வாயைப்பொத்தி வலுக்கட்டாயமாக மாறி மாறி கற்பழித்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் சென்றுவிட்டனர். அவர் வீட்டுக்கு வந்தபோது உடலில் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயார் கேட்டபோது, கீழே விழுந்துவிட்டதாக சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்த சிறுமி, சதீஷ்குமாரை செல்போனில் தொடர்புகொண்டு தன்னுடைய சிம்கார்டை தரும்படி கேட்டுள்ளார். அவரும் சிம்கார்டை தருவதாக கூறி, சிறுமியை வீட்டுக்கு வெளியே அழைத்துள்ளார். வெளியே வந்த பின்னர் சிறுமியை வீட்டின் அருகே உள்ள இருள் சூழ்ந்த பகுதிக்கு இழுத்துச்சென்று சதீஷ்குமார் கற்பழிக்க முயன்றுள்ளார்.

அப்போது சிறுமி கூச்சல் போடவே, அவருடைய பெற்றோர் அங்கு ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் சதீஷ்குமார் தப்பியோடிவிட்டார். பின்னர் சிறுமி நடந்த சம்பவங்களை கூறி பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் இருவருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story