புள்ளம்பாடி அருகே குளத்தை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட நிலம் மீட்பு
புள்ளம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பூவாருடையான் குளத்தை ஆக்கிரமித்து நெல் பயிரிடப்பட்ட நிலம் மீட்கப்பட்டது. சுமார் 40 ஆண்டு போராட்டத்துக்கு விடிவு காலம் பிறந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கல்லக்குடி,
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்யில் திருச்சி–சிதம்பரம் சாலையில் புள்ளம்பாடி சகாயமாதா பஸ் நிறுத்தம் வடக்குப்புறம் பூவாருடையான் குளம் உள்ளது. சுமார் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்திற்கு புள்ளம்பாடி கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு 50 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. நாளடைவில், அப்பகுதியை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டோர் இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து நெல் பயிரிட்டு இருந்தனர்.
இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீருவது என பொதுமக்கள் முடிவு செய்து தொடர்ந்து போராடி வந்தனர். இதுகுறித்து தற்போதைய லால்குடி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் ராகவன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட குளத்தை பார்வையிட்டு நேற்று அளவீடு செய்தனர். பின்னர், பேருராட்சி செயல் அதிகாரி நளாயினி தலைமையில் வருவாய் ஆய்வாளர் அப்துல்கரீம், குறுவட்ட நிலஅளவர் சங்கீதா மற்றும் வருவாய் துறை, பேருராட்சி பணியாளர்கள் பூவாருடையான் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். பின்னர் அந்த குளத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சிலர் கூறுகையில், பூவாருடையான் குளத்தை ஆக்கிரமித்து சிலர் நெல் பயிரிட்டு இருந்தனர். இதுகுறித்து நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் பயன் இல்லை. இந்த ஆக்கிரமிப்பு 40 ஆண்டு காலமாக நீடித்து வந்தது. எப்படியும் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டே தீருவது என்று போராடினோம். தற்போதுதான் இதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், சதீஷ்குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.