வாலிபரை தாக்கிய சம்பவம்: போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பேர் கைது
ஆலுவா அருகே வாலிபரை தாக்கிய போலீசாரை கண்டித்து, ஜனநாயக முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய அன்வர் சாதத் எம்.எல்.ஏ. உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்,
எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே எடத்தலையை சேர்ந்தவர் உஸ்மான்(வயது 28). சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் நின்றிருந்த இவரை, அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. பின்னர் அங்கு வைத்து உஸ்மானை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவருக்கு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்தும், வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று முன்தினம் ஜனநாயக முன்னணி சார்பில் அன்வர் சாதத் எம்.எல்.ஏ தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பேரணியாக சென்றவர்களை தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. மேலும் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து முன்னேறி செல்ல முயன்றதால் அவர்களை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போலீசார் கலைத்தனர்.
அதன்பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை எம்.எல்.ஏ. அன்வர் சாதத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், வாலிபரை கண்மூடித்தனமாக தாக்கிய போலீசாரை அரசு காப்பாற்ற முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, எம்.எல்.ஏ. உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே போலீசாரின் தடியடியில் காயம் அடைந்த 5 பேருக்கு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.