காங்கேயம் அருகே தீயில் கருகி மூதாட்டி சாவு சமையல் செய்தபோது பரிதாபம்
காங்கேயம் அருகே தீயில் கருகி மூதாட்டி பலியானார். சமையல் செய்த போது பரிதாப சம்பவம் நடந்தது.
காங்கேயம்,
காங்கேயம் அருகே உள்ள கீரனூர் கிராமம் சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மனைவி வள்ளியாத்தாள் (வயது 67). இவர்களுடைய மகள் மோகனாம்பாள் (37). இவருக்கு திருமணமாகி கணவருடன் அதே ஊரில் வசித்து வருகிறார். பொன்னுச்சாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் தென்னை ஓலையால் சாளை அமைத்து அதில் வள்ளியாத்தாள் மட்டும் வசித்து வந்தார். இவருக்கு தேவையான உதவிகளை மகளும், அந்த ஊரில் வசிக்கும் உறவினர்களும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்றவைத்து, வள்ளியாத்தாள் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குடிசையில் தீப்பற்றிக்கொண்டது. இதற்கிடையில் காற்று பலமாக வீசியதால் குடிசை முழுவதும் தீ மளமள வென்று பரவியதோடு பக்கத்தில் உள்ள சுந்தரம் என்பவரது வீட்டிலும் பரவியது.
இதனால் குடிசைக்குள் இருந்து வள்ளியாத்தாள் அலறியபடி வெளியே ஓடிவர முயன்றார். அதற்குள் குடிசையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த தென்னை ஓலைகள் மொத்தமாக வள்ளியாத்தாள் மீது விழுந்தது. இதனால் வீட்டிற்குள்ளே வள்ளியாத்தாள் உயிரோடு தீயில் கருகி பலியானார். இதற்கிடையில் இவருடைய வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்த பொதுமக்கள் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. அப்போது வீட்டிற்குள் வள்ளியாத்தாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
உடனே காங்கேயம் போலீசார் விரைந்து வந்து, வள்ளியாத்தாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சமையல் செய்யும்போது குடிசை வீட்டில் தீபரவி மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.