2 ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர் போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் சம்பவம்


2 ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்  போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் சம்பவம்
x
தினத்தந்தி 21 Jun 2018 3:15 AM IST (Updated: 21 Jun 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற 2 ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு

பெங்களூரு மகாலட்சுமி லே–அவுட் அருகே குருபரஹள்ளி 22–வது மெயின் ரோட்டில் வசிப்பவர்கள், தங்களுக்கு சொந்தமான கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்தனர். கடந்த 16–ந் தேதி நள்ளிரவில் வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், ஆட்டோக்கள், வேன், இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை கார்களில் வந்த மர்மநபர்கள் உருட்டு கட்டைகள், இரும்பு கம்பிகள், அரிவாள் உள்ளிட்டவற்றால் தாக்கி உடைத்தார்கள். இதில், 16 வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டிவிட்டு மர்மநபர்கள் தப்பி சென்றிருந்தனர்.

இதுகுறித்து மகாலட்சுமி லே–அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மர்மநபர்களை பிடிக்க வடக்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனர் சேத்தன்சிங் ராத்தோடு உத்தரவின் பேரில் மகாலட்சுமி லே–அவுட் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகித், சுப்பிரமணியநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரகுமார், ஜாலஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், குருபரஹள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, மர்மநபர்கள் வந்த கார்கள் அடையாளம் காணப்பட்டது.

போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கண்காணிப்பு கேமராவில் பதிவான ஒரு கார் ராஜகோபால் நகர் அருகே செல்வது பற்றி இன்ஸ்பெக்டர் லோகித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர்கள் லோகித், மகேந்திரகுமார், நிரஞ்சன்குமார் தலைமையில் போலீசார் ராஜகோபால் நகருக்கு போலீஸ் வாகனங்களில் விரைந்து சென்றனர். பின்னர் கரிம்ஷாப் லே–அவுட்டில் வைத்து அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார்கள். உடனே அவர்களை போலீசார் வாகனங்களில் துரத்திச் சென்றனர்.

சிறிது தூரத்தில் மர்மநபர்களின் காரின் டயரில் இன்ஸ்பெக்டர் லோகித் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டார். இதனால் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது. உடனே காரில் இருந்த 2 பேரையும் போலீஸ்காரர்கள் பிடிக்க முயன்றனர். அப்போது 2 நபர்களும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர்களை தாக்கினார்கள். இதில், 2 போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2 நபர்களையும் சரண் அடையும்படி இன்ஸ்பெக்டர் லோகித் கேட்டுக் கொண்டார். அவர்கள் சரண் அடைய மறுத்ததுடன், அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

இதையடுத்து, இன்ஸ்பெக்டர்கள் லோகித் மற்றும் மகேந்திரகுமார் ஆகியோர் 2 நபர்களை நோக்கி தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டார்கள். இதில், 2 நபர்களின் கால்களிலும் குண்டு துளைத்தது. இதனால் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து துடிதுடித்தார்கள். பின்னர் 2 பேரையும் மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தார்கள். அதன்பிறகு, 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல, மர்மநபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர்கள் அனுமந்தராஜ், சீனிவாஸ் ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி அறிந்ததும் துணை போலீஸ் கமி‌ஷனர் சேத்தன்சிங் ராத்தோடு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

ரவுடிகள்

அப்போது கைதானவர்கள், பசவேசுராநகர் அருகே கமலாநகரை சேர்ந்த ரபீக் (வயது 28), பிரகாஷ் நகரை சேர்ந்த சுதாகர்(30) என்பதும் தெரிந்தது. இவர்கள் 2 பேரும் ரவுடிகள் ஆவார்கள். அவர்கள் 2 பேர் மீதும் பெங்களூரு, ராமநகர் போலீஸ் நிலையங்களில் கொலைகள், கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கொள்ளை முயற்சி, பணம் கேட்டு மிரட்டல் உள்பட 17 வழக்குகளும், தமிழ்நாட்டில் பணத்திற்காக ஒருவரை கடத்தியதாக ஒரு வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 16–ந் தேதி நள்ளிரவில் தங்களது கூட்டாளிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து குருபரஹள்ளியில் நின்ற வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதையும் கைதான 2 பேரும் ஒப்புக் கொண்டனர்.

கைதான ரபீக், சுதாகர் மீது மகாலட்சுமி லே–அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். ரவுடிகள் 2 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 18–ந் தேதியும் பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையனான அச்சித்குமாரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story