கலபுரகியில் நெகிழ்ச்சி சம்பவம் மின்சாரம் தாக்கிய குரங்கை தத்தெடுத்து வளர்க்கும் பெண் போலீஸ் அதிகாரி


கலபுரகியில் நெகிழ்ச்சி சம்பவம் மின்சாரம் தாக்கிய குரங்கை தத்தெடுத்து வளர்க்கும் பெண் போலீஸ் அதிகாரி
x
தினத்தந்தி 22 Jun 2018 3:30 AM IST (Updated: 22 Jun 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகியில் மின்சாரம் தாக்கிய குரங்கை, உதவி பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

பெங்களூரு, 

கலபுரகியில் மின்சாரம் தாக்கிய குரங்கை, உதவி பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

மின்சாரம் தாக்கிய குரங்கு

கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் யசோதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள எல்லம்மா கோவில் அருகே உள்ள மைதானத்துக்கு சென்றார். அப்போது, அந்த மைதானத்தில் ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.

இதனால், அங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிய யசோதா அங்கு சென்றார். அப்போது, குரங்கு ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்தப்பகுதியில் உள்ள மின்வயரில் சென்றபோது அந்த குரங்கை மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக குரங்கை மீட்டு அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்கு பின்னர் குரங்கின் உடல் நலம் தேறியது. இதையடுத்து அந்த குரங்கை யசோதா தத்தெடுத்து கொண்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார். குரங்கு அவருடன் நன்றாக பழகி, அவர் கூறுவதை கேட்டு நடந்து கொள்கிறது. தனது குழந்தையை இடுப்பில் சுமந்து செல்வது போல் குரங்கையும் அவர் தூக்கி செல்வது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பாசமாக உள்ளது

இதுகுறித்து யசோதா கூறுகையில், ‘மின்சாரம் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. காப்பாற்ற முயன்றால் குரங்கு கடித்து விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உதவி செய்யவில்லை. நான் குரங்கை மீட்டு சிகிச்சை அளித்தேன். தற்போது குரங்கு நன்றாக உள்ளது. குழந்தை போல் பாசமாக என்னிடம் குரங்கு உள்ளது‘ என்றார்.


Next Story