பள்ளிகள், என்ஜினீயரிங் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி


பள்ளிகள், என்ஜினீயரிங் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 Jun 2018 4:36 AM IST (Updated: 22 Jun 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகள் மற்றும் புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரியில் சர்வதேச யோகாசன தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்தனர்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்த கல்லூரியில் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தனஞ்செயன் தலைமை தாங்கி யோகாவின் நன்மைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக்கூறினார். உலக சமுதாய சேவா சங்க புதுச்சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகையன், யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். உடல்கல்வி துறை உதவி பேராசிரியர் முருகேசன், யோகாசனங்களை செய்து காட்டினார்.

இந்த நிகழ்ச்சியையொட்டி மாணவ-மாணவிகள் பல்வேறு யோகசனங்களை செய்தனர். மேலும் மூச்சு பயிற்சியிலும் ஈடுபட்டனர். தொடக்கத்தில் பேராசிரியர் எழிலரசன் வரவேற்றார். முடிவில் டீன் பேராசிரியர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

புதுவை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறை சார்பில் அனைத்துலக யோகா நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலைப்புல முதன்மையரும், பேராசிரியருமான நளினி ஜே.தம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகா செயல்விளக்க பயிற்சியை தொடங்கிவைத்தார்.

அவர் பேசும்போது, ஆராய்ச்சித்துறையில் ஈடுபடும் மாணவர்கள் யோகா கலையில் ஈடுபட்டால் அவர்களால் தங்கள் மனதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதனால் திறன்களை மேம்படுத்திக்கொண்டு ஆற்றலை ஒருமுகப்படுத்தி வாழ்க்கையில் உன்னத நிலையை அடையமுடியும் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் யோகா நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, யோகா செயல்விளக்கம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழச்சியில் பதிவாளர் தரணிக்கரசு, நிதி அதிகாரி பிரகாஷ், உடற்கல்வி துறை பேராசிரியர் சுல்தானா, மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் நேற்று சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மாலதி தலைமை தாங்கி பேசினார். சமுதாய நலப்பணி திட்ட அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். புதுச்சேரி ஈஷா யோகா மைய தன்னார்வலர்கள் திலகவதி, ஏழுமலை, லெட்சுமி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு யோகாசனத்தின் நன்மைகள் பற்றி விளக்கி கூறியதோடு யோகாசனங்களையும் செய்து காண்பித்தனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியை ஜெயசுந்தரி நன்றி கூறினார்.

கரையாம்புத்தூரை அடுத்த மணமேடு அரசு ஆரம்பப் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் மணமேடு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

புதுவை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் 600 பேர் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.

யோகா நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் செல்வகணபதி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் லோக்நாத் பெஹரா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story