தூத்துக்குடி அருகே பரபரப்பு காற்றாலை அமைக்க எதிர்ப்பு; 3 கார்கள் உடைப்பு 6 பேரிடம் போலீசார் விசாரணை
தூத்துக்குடி அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கார்களை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். இதுதொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கார்களை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். இதுதொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
காற்றாலை அமைக்கும் பணிதூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டி பகுதியில் காற்றாலை அமைக்க அந்தபகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று சிலுக்கன்பட்டி அருகே தட்டப்பாறை பகுதியில் காற்றாலை அமைக்கும் பணி நடந்தது. அந்த பணிகளை பார்வையிட ஒப்பந்ததாரர்கள் 3 கார்களில் அங்கு வந்தனர்.
இதனை அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றவே 3 கார்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. தகவல் அறிந்த தூத்துக்குடி புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ் மற்றும் தட்டப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
6 பேரிடம் விசாரணைபின்னர் அவர்கள், வடக்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த ஜெயசீலன் (வயது 36), ஜெயபிரகாசி (55), மைக்கேல் அம்மாள் (45) உள்பட 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். உடைக்கப்பட்ட கார்களின் கண்ணாடிகள் ஆங்காங்கே சிதறியதில் சிவராமகிருஷ்ணன், பழனிசங்கர், செந்தூர்பாண்டி, சுரேஷ் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.