ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்தும், அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார், ஊட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி மலைப்பாதையில் நடந்த அரசு பஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி அல்லது நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரகாஷ், ஊட்டி நகர செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.