இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் உறவினர்களை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது


இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் உறவினர்களை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2018 3:00 AM IST (Updated: 23 Jun 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் உறவினர்களை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (வயது 24), பி.ஏ. படித்துள்ளார். இவர் கோவையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை தீவிரமாக காதலித்து உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கவுதம்ராஜ், தனது காதலை அந்த இளம்பெண்ணிடம் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்த அவர், கவுதம்ராஜை எச்சரித்தார்.

இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதனால் அவர் சென்னைக்கு சென்று விட்டார். இதற்கிடையே அந்த இளம்பெண்ணை பார்க்க முடியாமல் தவித்த கவுதம்ராஜ், அவர் குடியிருந்த பகுதிக்கு சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார்.

பின்னர் அவர் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி இளம்பெண்ணின் தாயாரிடம் கேட்டார். இதற்கு பெற்றோர் மறுத்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சத்தம் கேட்டு இளம்பெண்ணின் உறவினர்கள் 3 பேர் அங்கு வந்து கவுதம்ராஜிடம் தட்டிக்கேட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த கவுதம்ராஜ், அங்கிருந்த கட்டையை எடுத்து அவர்களின் தலையில் அடித்து காயப்படுத்தியதுடன், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story