தெருவிளக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கித்தொகையை பட்டுவாடா செய்ய உத்தரவு பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சம்பத்ராஜ் தகவல்


தெருவிளக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கித்தொகையை பட்டுவாடா செய்ய உத்தரவு பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சம்பத்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2018 4:00 AM IST (Updated: 23 Jun 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

தெருவிளக்கு ஒப்பந்ததாரரர்களுக்கு பாக்கித்தொகையை பட்டுவாடா செய்ய உத்தரவிட்டு இருப்பதாக பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் கூறினார்.

பெங்களூரு, 

தெருவிளக்கு ஒப்பந்ததாரரர்களுக்கு பாக்கித்தொகையை பட்டுவாடா செய்ய உத்தரவிட்டு இருப்பதாக பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் கூறினார்.

மஞ்சுநாத் பிரசாத் கமி‌ஷனராக...

பெங்களூரு மாநகராட்சி கூட்டம் மேயர் சம்பத்ராஜ் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், மாநகராட்சி புதிய கமி‌ஷனர் மகேஷ்வர்ராவ் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் உட்கார்ந்தபடியே பேசினார். இதற்கு அனைத்துக்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அவர் எழுந்து நின்று பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் குணசேகர், “இதற்கு முன்பு மஞ்சுநாத் பிரசாத் கமி‌ஷனராக இருந்தார். தேர்தல் நேரத்தில் அவரை பணி இடமாற்றம் செய்துவிட்டு உங்களை(மகேஷ்வர்ராவ்) கமி‌ஷனராக நியமித்தனர். பொதுவாக தேர்தல் நேரத்தில் பணி இடமாற்றம் செய்யப்படுபவர்கள் மீண்டும் அதே இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவது வழக்கம்.

பட்ஜெட்டுக்கு ஒப்புதல்

ஆனால் நீங்கள் இன்னும் பணி இடமாற்றம் செய்யப்படவில்லை. நீங்கள் கமி‌ஷனராக தொடர்ந்து நீடிப்பீர்களா? அல்லது பணி இடமாற்றத்தில் சென்று விடுவீர்களா?. மஞ்சுநாத் பிரசாத் மீண்டும் கமி‌ஷனராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வருகின்றன“ என்றார். இதற்கு பதிலளித்த மேயர் சம்பத்ராஜ், “அரசிடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் மகேஷ்வர்ராவே தொடர்ந்து நீடிப்பார்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி, “மாநில அரசு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. செலவுகளை சரியாக நிர்வகித்து திட்டங்களை அமல்படுத்த வேண்டும் அரசு நிபந்தனையை விதித்துள்ளது. இது சரியல்ல. இவ்வாறு நிபந்தனையை விதித்தால் வளர்ச்சி திட்டங்களை எப்படி அமல்படுத்த முடியும்?“ என்றார்.

எந்த தொந்தரவும் இல்லை

உடனே குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் குழு தலைவர் சிவராஜ், “ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டுக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கும்போது, இதுபோன்ற நிபந்தனையை விதிப்பது என்பது வழக்கமானது தான். அதனால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் எந்த தொந்தரவும் இல்லை“ என்றார்.

மாநகராட்சி கமி‌ஷனர் மகேஷ்வர்ராவ் பேசுகையில், “மாநில அரசு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. திட்ட செலவுகளில் ஏற்ற–இறக்கம் ஏற்படுவது வழக்கமானது தான். துணை பட்ஜெட்டை தாக்கல் செய்து செலவுகளை சரிசெய்துகொள்ள முடியும். கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட திட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அமல்படுத்தப்படும்“ என்றார்.

கெம்பேகவுடா ஜெயந்தி விழா

அப்போது பேசிய மேயர் சம்பத்ராஜ், “கர்நாடக அரசு சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா வருகிற 27–ந் தேதி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடக்கிறது. இதில் முதல்–மந்திரி குமாரசாமி, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். கவுன்சிலர்கள் தங்களின் பகுதிகளில் இருந்து மக்களை அழைத்து வந்து பங்கேற்க வேண்டும்“ என்றார்.

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மேயர் கட்டா சத்தியநாராயணா பேசுகையில், “கர்நாடக அரசு சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா நடக்கிறது. மாநகராட்சி சார்பில் இந்த விழா நடத்தப்படுமா? இல்லையா? என்று சொல்ல வேண்டும்“ என்றார். இதற்கு காங்கிரஸ் குழு தலைவர் சிவராஜ் பதிலளிக்கையில், “கெம்பேகவுடா ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும். ஆனால் இந்த முறை தேர்தல் நடந்ததால், அந்த ஜெயந்தி விழா வருகிற 27–ந் தேதி நடக்கிறது. மேலும் மாநகராட்சி சார்பிலும் கெம்பேகவுடா ஜெயந்தி நடத்தப்படும். இதுகுறித்து மேயர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். ஜூலை மாதம் இந்த விழா நடைபெறும்“ என்றார்.

தெருவிளக்குகளை அணைத்து...

மீண்டும் பேசிய கட்டா சாத்தியநாராயணா, “நிலுவைத்தொகை பாக்கியை பட்டுவாடா செய்யவில்லை என்று கூறி தெருவிளக்கு ஒப்பந்ததாரர்கள் தெருவிளக்குகளை அணைத்து வைத்து போராட்டம் நடத்தினர். ஆயினும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாக்கி தொகை இன்னும் கிடைக்கவில்லை. இந்த பாக்கியை மாநகராட்சி எப்போது பட்டுவாடா செய்யும்“ என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் சம்பத்ராஜ், “கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தெருவிளக்கு ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகையை பட்டுவாடா செய்யும்படி சிறப்பு கமி‌ஷனருக்கு உத்தரவிட்டேன். அந்த தொகையை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். ஆனால் இதுவரை நிலுவைத்தொகையை பட்டுவாடா செய்யவில்லை. இதற்கு அந்த சிறப்பு கமி‌ஷனர் தான் பதில் சொல்ல வேண்டும்“ என்றார்.


Next Story