சென்னை விமான நிலையத்துக்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலைய வளாகத்தில் தீ விபத்து


சென்னை விமான நிலையத்துக்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலைய வளாகத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 23 Jun 2018 3:38 AM IST (Updated: 23 Jun 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்துக்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலைய வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் மவுண்ட்-பூந்தமல்லி சாலையையொட்டி சென்னை விமான நிலையத்துக்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலையம் அமைந்துள்ளது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த திசை காட்டும் கருவி நிலைய வளாகத்தில், சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் விமானங்களுக்கு திசை காட்டுவதற்காக ஏராளமான திசை காட்டும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த பகுதியில் ஏராளமான செடிகள், புற்கள், சிறிய அளவிலான மரங்கள் அதிகளவில் வளர்ந்து அடர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு இதன் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

வெயில் காரணமாக புற்கள், செடிகள் காய்ந்து இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதை கண்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளிகள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விருகம்பாக்கம், கிண்டி, விமான நிலையம் உள்ளிட்ட 4 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் அங்கிருந்த காய்ந்த செடி, கொடிகள், புற்கள் அனைத்தும் தீயில் கருகின. திசை காட்டும் கோபுரங்கள் அருகில் தீ பரவுவதற்குள் தீ அணைக்கப்பட்டு விட்டதால், திசை காட்டும் கோபுரங்கள் எந்த சேதமும் இன்றி தப்பியது.

தீ விபத்தின்போது அருகில் உள்ள வீடுகளை புகை சூழ்ந்ததால் அங்கு வசித்து வந்த பொதுமக்கள் தூக்கம் இன்றி பரிதவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக முகலிவாக்கத்தில் உள்ள சபரி நகர், சுபஸ்ரீ நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திசை காட்டும் கருவி நிலைய வளாகத்தில் அதிகளவில் புற்கள் வளர்ந்து, வெயிலில் காய்ந்து இருந்தது. அவற்றை அகற்றும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் அந்த இடம் முழுவதும் ஈரமானது. இதனால் புற்களை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

திசை காட்டும் கோபுரங்களில் உள்ள பேட்டரிகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது வேண்டும் என்றே தீ வைத்து சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story