மதுரையை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.8 லட்சம் மோசடி; நைஜீரியா வாலிபர் கைது
மதுரையை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியா வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரையை சேர்ந்தவர் அபிஷேக்குமார். இவரின் மின்னஞ்சலுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு தகவல் வந்தது. வெளிநாட்டில் நாங்கள் உங்களுக்கு அனுப்பும் விதைக்கு நல்ல மதிப்பு உள்ளது. அதனை நீங்கள் உங்கள் ஊரில் உற்பத்தி செய்து கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தனர். அதற்கு முன் பணமாக 8 லட்சம் ரூபாயை அனுப்புங்கள் என்று தகவல் வந்தது.
உடனே அபிஷேக்குமார் பணத்தை மின்னஞ்சலில் கூறப்பட்டு இருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் வெளிநாட்டில் இருந்து அபிஷேக்குமாருக்கு விதைகள் அனுப்பப்படவில்லை. இதுகுறித்து அபிஷேக்குமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மோசடி வழக்கில் நைஜீரியாவை சேர்ந்த ஒமர் ஒசாக்கா(வயது 30) என்பவரை மும்பையில் வைத்து சென்னை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளதும், அவருக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து மதுரை சைபர் கிரைம் போலீசார் சென்னை சென்று அவரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும் போது, நைஜீரியா வாலிபரிடம் விசாரணை நடத்தினால், அவரை போன்று பலர் இதில் சிக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் இது மாதிரி பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கலாம். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம் என்றார்.