மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து 8 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல்


மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து 8 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Jun 2018 4:15 AM IST (Updated: 24 Jun 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மு.க.ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் 8 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்ற தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை உள்பட 8 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் அஞ்சலக வீதியில் இருந்து தி.மு.க.வினர் பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பஸ் நிலையம் அருகில் மதுரை ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல், வடககு ஒன்றிய செயலாளர் மாணிககம், நகர செயலாளர் கார்த்திகேயன், கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றககுடி சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் உதயசண்முகம், கான்முகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் மறியல் செய்த பெரியகருப்பன் எம்.எல்.ஏ. உள்பட 57 பேரை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைதுசெய்தனர்.

சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு மறியல் போராட்டம் செய்த நகர செயலாளர் துரை ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து உள்பட 30 பேரை டவுன் போலீசார் கைதுசெய்தனர். இதேபோன்று திருப்புவனத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் 50 பேரும், காரைக்குடியில் பெரியார் சிலை பகுதியில் சாலை மறியல் செய்த நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கென்னடி, பொறியாளர் அணி அமைப்பாளர் சொக்கு உள்பட 21 பேரும் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதேபோல் மானாமதுரை தேவர் சிலை பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். இளையான்குடி கண்மாய்க்கரை பகுதியில் ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் தலைமையில் சாலை மறியல் செய்த 30 பேரை போலீசார் கைதுசெய்தனர். இதேபோன்று காளையார்கோவில், தேவகோட்டை ஆகிய பகுதிகளிலும் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.


Next Story