நூதன முறையில் ரூ.12½ லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரிகள் 2 பேர் கைது


நூதன முறையில் ரூ.12½ லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2018 3:45 AM IST (Updated: 24 Jun 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.12½ லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா சோழகம்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 42). இவர் விவசாய கடன் பெறுவதற்காக புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள ஒரு வங்கியில் தனது வீடு மற்றும் நிலங்களை ரூ.14 லட்சத்திற்கு அடமானம் வைத்திருந்தார். அப்போது அவர் வங்கி கடன் பெறுவதற்காக வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. அப்போது வங்கியில் இருந்து அவருக்கு வங்கி சேமிப்பு புத்தகம், ஏ.டி.எம்.கார்டு மற்றும் காசோலை போன்றவை வழங்கப்பட்டது.

இதில் வங்கி ஊழியர்கள் ராமதாசுக்கு தெரியாமல் ஒரு காசோலை மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். படிவத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர். பின்னர் அவரது சேமிப்பு கணக்கில் இருந்த விவசாய கடன் தொகையில் இருந்து ரூ.12 லட்சத்து 48 ஆயிரத்தை தஞ்சாவூரில் உள்ள ஒரு வங்கியில் மாரிமுத்து என்பவர் பெயரில் உள்ள சேமிப்பு கணக்கிற்கு மாற்றி மோசடி செய்து உள்ளனர்.

இந்நிலையில் ராமதாஸ் ஏ.டி.எம். மூலம் ரூ.20 ஆயிரம் பணம் எடுத்து உள்ளார். அப்போது வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்து 48 ஆயிரம் குறைவாக இருந்தது அவருக்கு தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கீழராஜவீதியில் உள்ள வங்கிக்கு சென்று கேட்டு உள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள் நீங்கள் காசோலை மூலம் ரூ.12 லட்சத்து 48 ஆயிரத்தை எடுத்து உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத் தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமி விசாரணை நடத்தி ராமதாஸ் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.12 லட்சத்து 48 ஆயிரம் மோசடி செய்ததாக திருச்சி காட்டூர் கோகிலா நகர் 5-ம் வீதியை சேர்ந்த வங்கி மேலாளர் (விவசாய பிரிவு) பிரவின்குமார் (27), புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி பகுதியை சேர்ந்த உதவி மேலாளர் (விவசாய பிரிவு) பெரேழிலன் (24), உதவி மேலாளர் ராம்குமார், மேலாளர் பிரபாகர், மாரிமுத்து ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேலாளர் பிரவின்குமார், உதவி மேலாளர் பெரேழிலன் ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story