பாளையங்கோட்டையில் அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன்– ரூ.14 லட்சம் கொள்ளை


பாளையங்கோட்டையில்  அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன்– ரூ.14 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 24 Jun 2018 3:00 AM IST (Updated: 24 Jun 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் அரிசி ஆலை அதிபர் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்டு அவரது வீட்டில் 80 பவுன்– ரூ.14 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் அரிசி ஆலை அதிபர் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்டு அவரது வீட்டில் 80 பவுன்– ரூ.14 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது.

நேற்று அதிகாலையில் நடந்த இந்த துணிகர கொள்ளை பற்றிய விவரம் வருமாறு:–

அரிசி ஆலை அதிபர்

பாளையங்கோட்டை திம்மராஜபுரம் வருசபத்து தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் பாண்டி (வயது 52). இவர், பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர், தனது குலதெய்வமான நாங்குநேரி தாலுகா வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவுக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நேற்று அதிகாலை 4 மணிக்கு தனது குடும்பத்தினருடன் காரில் வடக்கு விஜயநாராயணத்துக்கு சென்றார். பின்னர் காலை 10 மணி அளவில் மீண்டும் குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தார்.

நகை– பணம் கொள்ளை

வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி, அவரை மட்டும் அல்லாமல் குடும்பத்தினரையும் அதிர்ச்சி அடைய செய்தது. வீட்டில் இருந்த 2 பீரோக்கள், அலமாரி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோக்களில் இருந்த நகைகள்– பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி கமி‌ஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்–இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், பழனிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

80 பவுன்– ரூ.14 லட்சம்

போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தின் வழியாக ஏறி, வீட்டின் காம்பவுண்டுக்குள் குதித்துள்ளனர். அதன்பிறகு பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அதுவும் காலை 5 மணிக்கு பிறகுதான் வீட்டுக்குள் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.14 லட்சம் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளையில் 5–க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக ஈடுபட்டு இருக்கலாம் என்பது தெரிகிறது.

பாண்டி, கோவிலுக்கு செல்வதை நோட்டமிட்டுத்தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே அவருக்கு தெரிந்த நபர்கள்தான் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மோப்பநாய்

கொள்ளை நடந்த வீட்டுக்கு போலீஸ் மோப்பநாய் புளுட்டோ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி மெயின்ரோடு வரை சென்றது. சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், வீட்டின்பின்பக்க கதவு, பீரோக்கள், அலமாரி உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

போலீசார் விசாரணை

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சப்–இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் உடனே விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியவர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பாண்டி வீட்டில் பதிவான கை ரேகைகளும், ஏற்கனவே கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களின் கை ரேகைகளும் ஒத்து போகிறதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

பரபரப்பு

பாளையங்கோட்டையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அதுவும் அதிகாலை 5 மணி அளவில் இந்த துணிகர கொள்ளை நடந்து இருப்பது அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

4 மணிக்கு கோவிலுக்கு சென்ற பாண்டி, 10 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். 6 மணி நேரத்துக்குள் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் பாளையங்கோட்டை பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விடிய விடிய காத்திருந்த கொள்ளையர்கள்

பாண்டி, குல தெய்வ கோவிலுக்கு செல்வதை அறிந்துதான் மர்மநபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எனவே பாண்டி எப்போது கோவிலுக்கு செல்வார் என்பது தெரியாமல், வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில் இரவு ஏறிய கொள்ளையர்கள் விடிய விடிய மரத்திலேயே காத்திருந்து அதிகாலை 5 மணிக்கு தங்களது கைவரிசையை காட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story