விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்


விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2018 3:30 AM IST (Updated: 24 Jun 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே சத்தியவாடி கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களில் 156 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மக்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள 39 சென்ட் இடத்தை, பொது நிகழ்ச்சிகளுக்காக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் அந்த பொதுஇடத்துக்கு பட்டா வாங்கியதாகவும் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ரத்னாவதி, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜா மற்றும் நில அளவையாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த இடத்தை அளவீடு செய்தனர். இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அப்போது அதிகாரிகள் இடம் அளவீடு செய்து முடிக்கப்பட்டு விட்டது, எனவே இடம் அளந்ததற்கான அறிக்கையில் கையெழுத்திடுங்கள் என கேட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றினால்தான் கையெழுத்திடுவோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கையெழுத்து போட மறுத்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story