பண்ருட்டியில் தொழில் அதிபர் காரில் கடத்தல், போலீசார் விசாரணை
பண்ருட்டியில் தொழில் அதிபரை மர்மநபர்கள் காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயரங்கன் (வயது 46). தொழில் அதிபர். இவருடைய மனைவி அபிராமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
விஜயரங்கன், கும்பகோணம் சாலையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் வியாபாரத்தை முடிந்த பிறகு கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் லட்சக்கணக்கில் பணத்தை ஒரு பையில் வைத்து வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் நேற்று இரவு 8.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, விஜயரங்கன் தனது மோட்டார் சைக்கிளில் பணப்பையுடன் வீடு நோக்கி புறப்பட்டார். காமராஜர் நகர் அருகே வடகைலாசம் கூட்டுறவு சங்கம் அருகே வந்த போது, அவர் பின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து விஜயரங்கன் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி விஜயரங்கன் கீழே விழுந்தார். அப்போது அங்கு கண்இமைக்கும் நேரத்தில் கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், சாலையில் கிடந்த விஜயரங்கனை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அலறி, கூச்சலிட்டார்.
இந்த சத்தம்கேட்டு பொது மக்கள் ஒன்று திரண்டனர். இதில் சுதாரித்த அந்த மர்ம கும்பல் விஜயரங்கனை காரில் ஏற்றி, அவரை கடத்தில் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அந்த கார், சினிமாமவில் நடப்பது போல மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர், விஜயரங்கனின் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ஆரோக்கியராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், விஜயரங்கனின் வீட்டிற்கு சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அவர் கடத்தப்பட்டாரா? அல்லது பணத்துக்காக கடத்தப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.