பழங்குடியின மாணவர்களுக்கு ‘சாதிச்சான்று வழங்க அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் விரைவில் மாநாடு நடத்தப்படும்’ திருமாவளவன் பேச்சு


பழங்குடியின மாணவர்களுக்கு ‘சாதிச்சான்று வழங்க அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் விரைவில் மாநாடு நடத்தப்படும்’ திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 24 Jun 2018 4:45 AM IST (Updated: 24 Jun 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்று வழங்க அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் விரைவில் மாநாடு நடத்தப்படும் என்று விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம், பழங்குடியினர் விடுதலை இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை சார்பில் பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்று வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபாகல்விமணி, தலைவர் ஜெயபாலன், பழங்குடியினர் விடுதலை இயக்க தலைவர் தளபதிதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, சேரன், தனபால், பாமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:–

பழங்குடியின மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அரசு சாதிச்சான்றிதழ் வழங்குவதில்லை. ஆனால் பிற சமூகத்தினர் எஸ்.சி., எஸ்.டி. என்று போலியான சான்றிதழை பெற்று தமிழகத்தில் 3 சதவீதம்பேர் வங்கி மற்றும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

உலகம் முழுவதும் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல அரசியல் ரீதியாக எழுச்சி பெற்று விடக்கூடாது என்பதற்காக நாம் ஒடுக்கப்பட்டு வருகிறோம். எந்த அரசியல் கட்சிகளும் இந்த சமூகத்தை பற்றி கவலைப்படுவதில்லை. யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களது வாக்கு வங்கிகளை பெற வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர்.

இங்குள்ள மாவட்ட கலெக்டருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், 15 நாட்களுக்குள் பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்று கிடைக்க ஆவன செய்ய வேண்டும். விரைவில் சாதிச்சான்று வழங்க அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற வகையில் அனைத்து பழங்குடி சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து திருச்சியிலோ, விழுப்புரத்திலோ அல்லது புதுச்சேரியிலோ 2 லட்சம் பழங்குடியின மக்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story