சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது: தஞ்சை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது


சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது: தஞ்சை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2018 4:30 AM IST (Updated: 24 Jun 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

நாமக்கல்லில் நேற்றுமுன்தினம் ஆய்வு பணி மேற்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க.வினர் 192 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாக சென்ற தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவிடைமருதூர் கடைவீதியில் முன்னாள் எம்.எல்.ஏ. செ.ராமலிங்கம் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் திருவிடைமருதூர் கலைஞர் பாசறையிலிருந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு கடைவீதிக்கு வந்தனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் செல்லும் வாகனங்களை வேறு வழியில் போலீசார் மாற்றி விட்டனர். மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 65 பேரை திருவிடைமருதூர் போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் பேரூர் செயலாளர்கள் சுந்தரஜெயபால், எஸ்.கே.பஞ்சநாதன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பி.முனியசாமி, ஜி.கே.எம்.ராஜா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் உள்பட திரளான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பனந்தாளில் தி.மு.க.வினர் கோவி.செழியன் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஒன்றிய செயலாளர்கள் கோ.ரவிச்சந்திரன், கோ.க.அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய துணை தலைவர் கோ.சி.இளங்கோவன், பேரூர் கழக செயலாளர் சப்பாணி, தி.மு.க.நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தி.மு.க. செயல் தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கும்பகோணம்- சென்னை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பனந்தாள் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கோவி.செழியன் எம்.எல்.ஏ. உள்பட 60 பேரை கைது செய்தனர். இதைப்போல பந்தநல்லூர் கடைவீதியிலும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைப்போல கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நேற்று மதியம் தாராசுரம் அண்ணாசிலை முன்பு ஒன்றிய செயலாளர் ரா.அசோக்குமார் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் பேரூர் கழக செயலாளர்கள் ஏ.சாகுல்ஹமீது, எஸ்.எம்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார், கோவிந்தராஜ், கேசவன், ஊராட்சி செயலாளர்கள் செல்வம், ராமச்சந்திரன், விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தால் கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பகோணம் தாலுகா போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 55 பேரை கைது செய்தனர்.

கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகே தி.மு.க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அன்பழகன் எம்.எல்.ஏ. நகர செயலாளர் தமிழழகன், ஒன்றியசெயலாளர் (கிழக்கு) கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருப்புக்கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் செய்த 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.ஒரத்தநாட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் மு.காந்தி, ஒரத்தநாடு நகர செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 66 பேரை ஒரத்தநாடு போலீசார் கைது செய்தனர். இதைப்போல திருவோணத்தை அடுத்துள்ள ஊரணிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட ஒன்றிய தி.மு.க செயலாளர் மகேஷ்கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேரை திருவோணம் போலீசார் கைது செய்தனர்.

பாபநாசத்தில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு, பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதைப்போல அம்மாப்பேட்டையில் அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக. சுரேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.குமார் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story