தொன்மையை பறை சாற்றும் கீழடி அகழாய்வை விரிவாக நடத்த வேண்டும் பழ.நெடுமாறன் வலியுறுத்தல்


தொன்மையை பறை சாற்றும் கீழடி அகழாய்வை விரிவாக நடத்த வேண்டும் பழ.நெடுமாறன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Jun 2018 4:30 AM IST (Updated: 25 Jun 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

பழந்தமிழரின் நாகரீக தொன்மையை பறை சாற்றும் கீழடி அகழாய்வை விரிவாக நடத்த வேண்டும் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.

சுந்தரக்கோட்டை,

உலக தமிழர் பேரமைப்பு சார்பில் தமிழர் வரலாற்று தொன்மை எனும் தலைப்பில் கருத்தரங்கம் மன்னார்குடியில் நடந்தது. கருத்தரங்கிற்கு உலக தமிழர் பேரமைப்பு செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் டாக்டர். பாரதிசெல்வன் வரவேற்றார். கருத்தரங்கில் கலந்துகொண்டு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் மொழி உலகின் மூத்த மொழி. இதற்கான இலக்கியங்கள், இலக்கணங்கள் ஆதாரமாக நம்மிடம் நிறைய இருக்கின்றன. அதற்குரிய கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. ஆனால் தொல்லியல் ஆதாரங்கள் மிக சொற்பமாகவே நமக்கு கிடைத்துள்ளன. அதற்கு தொல்லியல் அகழாய்வுகள் தமிழகத்தில் அதிகம் நடத்தப்படாததே காரணம். அரிக்கமேடு, பூம்புகார் என சொற்பமாக தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டு இருந்தாலும் தற்போது கீழடியில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் தமிழர் நாகரீகத்தின் தொன்மையை எடுத்துரைக்கும் விதமாக ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

பழந்தமிழரின் நாகரீக தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழாய்வை மேலும் விரிவாக நடத்த மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் மேலும் அகழாய்வு செய்ய தெரிவு செய்யப்பட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் நாகரீகம் உலகின் தொன்மையான நாகரீகம் என்பதை பறைசாற்றும் விதமான தொல்லியல் சான்றுகள் நமக்கு கிடைக்கும். தமிழர்களின் நாகரீகம் தொன்மையானது என்பதை புரியும் விதமாக இளைஞர்களிடம், மாணவர்களிடம் கொண்டு சேர்க்க தொல்லியல் ஆய்வுகள் பயன்படும்.

இந்த ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினருக்கு தமிழ் சமூகம் கடமைப்பட்டுள்ளது. வரலாற்றின் எதிர்காலத்தில் இந்த ஆய்வு இளைஞர்களுக்கு பெரும் ஊக்கத்தையும், மேன்மையையும் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கருத்தரங்கில் கீழடி அகழாய்வு பணியில் ஈடுபட்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் செய்யப்பட்ட ஆய்வு குறித்தும், அதில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் குறித்தும், ஆவணப்படுத்திய விதம் குறித்தும் விளக்கி பேசினார். உலக தமிழர் பேரமைப்பு செயலாளர் தமிழ்மணி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் செல்வகுமார், தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.

இதில் உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகிகள் ஜான்கென்னடி, துரை.குபேந்திரன், ராஜசேகரன், பாரதிதாசன் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வரவேற்பு குழு செயலாளர் கலைச்செல்வம் நன்றி கூறினார். 

Next Story