திசையன்விளை அருகே பயங்கரம் காதல் தகராறில் வாலிபர் கொலை நண்பர்கள் 2 பேர் கைது
திசையன்விளை அருகே காதல் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை,
திசையன்விளை அருகே காதல் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் பிணம்நெல்லை மாவட்டம் திசையன்விளை மின்வாரிய அலுவலகம் அருகே கல்வெட்டான்குழி பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த திசையன்விளை மற்றும் தட்டார்மடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வாலிபர் உடல் கிடந்த பகுதி தூத்துக்குடி மாவட்ட எல்கை என்பதால் தட்டார்மடம் போலீசார், வாலிபரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
திடுக்கிடும் தகவல்கள்போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–
காயங்களுடன் பிணமாக கிடந்தவர் திசையன்விளை மன்னர்ராஜா கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி நாடார் மகன் முத்து பட்டுராஜா (வயது 22) என்பது தெரியவந்தது. அவருடைய தந்தை இறந்து விட்டார். தாய் திசையன்விளை சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். முத்து பட்டுராஜா திசையன்விளையில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கும், அவருடைய நண்பருக்கும் ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக போட்டி இருந்துள்ளது. அதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நண்பர் உள்ளிட்ட சிலர், முத்து பட்டுராஜாவை பேசுவதற்கு அழைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் முத்து பட்டுராஜா அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
நண்பர்கள் 2 பேர் கைதுஇதையடுத்து முத்து பட்டுராஜாவுடன் வேலை பார்த்து வரும் மடத்து அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்த சுரேஷ், காரம்பாடு கிராமத்தை சேர்ந்த சுபாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திசையன்விளை அருகே காதல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.