காதல் திருமணம் செய்த சலவை தொழிலாளி மனைவியுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


காதல் திருமணம் செய்த சலவை தொழிலாளி மனைவியுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 24 Jun 2018 10:45 PM GMT (Updated: 24 Jun 2018 9:05 PM GMT)

காதல் திருமணம் செய்த சலவை தொழிலாளி மனைவியுடன் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களை பெண் வீட்டார் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் புருசோத்தமன் (வயது29). டிப்ளமோ படித்துள்ள இவர் ஸ்ரீரங்கம் நெடுந்தெருவில் துணிகளுக்கு ‘இஸ்திரி’ போட்டு தேய்த்து கொடுக்கும் சலவை தொழில் செய்து வருகிறார்.

இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த மகாமுனி மகள் நதியாவுக்கும்(28) காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த இவர்கள் நேற்று கோட்டூரில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கோவிலில் திருமணம் செய்து விட்டு கழுத்தில் மாலையுடன் வந்த காதல் ஜோடியை பெண் வீட்டார் தாக்கப்போவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து புருசோத்தமனும், நதியாவும் தங்களுடைய வக்கீல் உதவியுடன் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நதியாவின் பெற்றோரை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது நதியாவின் பெற்றோர்கள் சாதி மாறி திருமணம் செய்து கொண்ட நதியா தங்களுக்கு மகளே அல்ல, அவளது உறவை முறித்துக்கொள்கிறோம் என்று எழுதி கொடுத்தனர். உடனே நதியா பெற்றோர் கொடுத்த தங்க சங்கிலி, தோடு உள்ளிட்ட 2 பவுன் நகைகளை கழற்றி கொடுத்துவிட்டு தனது காதல் கணவருடன் செல்ல விரும்புவதாக கூறினார்.

அப்போது நதியாவின் பெற்றோருடன் வந்திருந்த உறவினர்கள் காதல் ஜோடியை திடீர் என அடிக்க பாய்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து புருசோத்தமன், எனக்கு நதியா மட்டும் போதும், அவருடைய நகைகள் எதுவும் தேவையில்லை. கட்டிய சேலையுடன் நதியாவை அழைத்து செல்ல தயார். எங்களுக்கு பாதுகாப்பு மட்டும் அளித்தால் போதும் என்று எழுதி கொடுத்து விட்டு தனது மனைவியை அங்கிருந்து அழைத்து சென்றார்.

Next Story