முதியவர் மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம்: மர்மஉறுப்பில் தாக்கி கொன்ற மகன்–மருமகள் கைது


முதியவர் மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம்: மர்மஉறுப்பில் தாக்கி கொன்ற மகன்–மருமகள் கைது
x
தினத்தந்தி 25 Jun 2018 3:45 AM IST (Updated: 25 Jun 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

பாகல்கோட்டை அருகே முதியவர் மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு, 

பாகல்கோட்டை அருகே முதியவர் மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்து தகராறில் அவரை மர்மஉறுப்பில் தாக்கி அவரை கொலை செய்ததாக அவருடைய மகன்–மருமகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மர்மச்சாவு

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா கெரூர் அருகே உள்ள நீரலகெரே கிராமத்தை சேர்ந்தவர் பீமப்பா(வயது 80). இவர் தனது மகன் எல்லப்பாவின் வீட்டில் வசித்து வந்தார். எல்லப்பாவுடன் அவருடைய மனைவி சித்தவ்வாவும் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 14–ந் தேதி பீமப்பா மர்மமான முறையில் இறந்தார்.

இதையடுத்து, வயது முதிர்வு காரணமாக பீமப்பா இறந்ததாக கூறி அன்றைய தினமே அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தி உடலை புதைக்க எல்லப்பா முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்தார். இந்த வேளையில், கெரூர் போலீஸ் நிலையத்துக்கு போன் செய்த ஒருவர், ‘பீமப்பா வயது முதிர்வு காரணமாக இறக்கவில்லை. அவருடைய மர்மஉறுப்பில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதனால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். எனவே, பீமப்பாவின் சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என கூறினார்.

மர்மஉறுப்பில் தாக்கி கொலை

இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறுதி சடங்கை நிறுத்தி பீமப்பாவின் உடலை கைப்பற்றினர். மேலும், மர்மசாவு என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த அறிக்கையில், ‘பீமப்பா மர்மஉறுப்பில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்‘ என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கெரூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்.

சொத்து பிரச்சினை

மேலும் பீமப்பாவின் மகன் எல்லப்பா, அவருடைய மனைவி சித்தவ்வா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது எல்லப்பா, தனது மனைவி சித்தவ்வாவுடன் சேர்ந்து தன்னுடைய தந்தை பீமப்பாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து எல்லப்பா–சித்தவ்வா ஆகியோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘எல்லப்பா–சித்தவ்வா ஆகியோர் பீமப்பாவை கண்காணித்து வந்தனர். சமீப காலமாக பீமப்பாவை அவர்கள் சரியாக கண்காணிக்கல்லை. இதனால், கோபமடைந்த பீமப்பா தனது சொத்தில் பாதியை மகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று எல்லப்பாவிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த எல்லப்பா தனது மனைவி சித்தவ்வாவின் உதவியுடன் பீமப்பாவின் மர்மஉறுப்பில் தாக்கி அவரை கொலை செய்தார். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்’ என்றனர்.


Next Story