கே.செவல்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு


கே.செவல்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 Jun 2018 4:00 AM IST (Updated: 26 Jun 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி தாலுகாவில் உள்ள கே.செவல்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

விருதுநகர்,

மக்கள் குறை கேட்பு கூட்டம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஏராளமானோர் மனு கொடுத்தனர். காரியாபட்டி அருகிலுள்ள கே.செவல்பட்டி கிராமத்தினர் கொடுத்த

மனுவில் கூறியிருப்பதாவது:–

காரியாபட்டி தாலுகாவில் உள்ள கே.செவல்பட்டி கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் நீர்தேக்க தொட்டி பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யாததால் தண்ணீருக்காக சாலையை கடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது.

எங்கள் பகுதி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சாலையோர சுகாதார வளாகம் மற்றும் குளியலறை பகுதிகள் சரி செய்யப்படாததால் வெளிஆட்கள் அவற்றை தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள். சாலை வசதிகளும் சீராக இல்லை. எனவே இது குறித்து கள ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எரிச்சநத்தம் கிராமத்தில் பொது நடைபாதை மற்றும் மந்தை கோவில் இடம் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்பை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சிவகாசி தாசில்தார் கடந்த 12–ந்தேதி நிலஅளவை செய்து பார்த்த போது ஆக்கிரமிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள ஏ.சுப்பிரமணியபுரம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் தங்கள் கிராமத்தில் கடந்த 2017–ம் ஆண்டு பாலியல் புகாரால் கைது செய்யப்பட்டவர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வந்துள்ள நிலையில் கிராம மக்களை மிரட்டுவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தையும் மிரட்டி வருகிறார். எனவே கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்புலிகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் விடியல் வீரபெருமாள், கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

அருப்புக்கோட்டை தாலுகா கல்லூரணி, நார்த்தம்பட்டி, முத்துராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தனியார் சிமெண்டுநிறுவனம் சுண்ணாம்புகல் குவாரி அமைக்க அனுமதி கேட்டுள்ள நிலையில் இந்த குவாரி அமைக்கப்பட்டால் கிராம மக்களுக்கு வாழ்வியல் சூழ்நிலை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரதமும் பாதிக்கப்படும். எனவே இதற்கு அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story