கடலூரில் அண்ணா சிலை சேதம்: தி.மு.க.வினர் சாலை மறியல்: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் அண்ணா சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டமும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டுக்கு கீழே பேரறிஞர் அண்ணாவின் முழு உருவ சிலை உள்ளது. இந்த சிலையின் இடது கை நேற்றுமுன்தினம் சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு முன்பு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலைத்தனர்.
இந்த நிலையில் அண்ணா சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், அதனை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரியும் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டுக்கு முன்பு தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டமும், சாலைமறியல் போராட்டமும் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்துக்கு நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணி செயலாளர் இள.புகழேந்தி, ஏ.ஜி.ஆர்.சுந்தர், அகஸ்டின், சலீம், கோவலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறும் போது, சிலை தானாகவே சேதமடைந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் அந்த சிலையை யாரோ மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரியும், ஒருவாரத்துக்குள் சிலையை சீரமைக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் டாக்டர் ராஜா பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் டி.ஜி.என்.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் வினோத் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ராயல், செந்தில்குமார், நகர இணைச்செயலாளர் இளங்கோ, துணைச்செயலாளர்கள் சீனிவாசன், சலீம், பொருளாளர் சக்திவேல், ஒன்றிய அவைத்தலைவர் நாகமுத்து, மாவட்ட மீனவர் அணி கலைவாணன், எம்.ஜி.ஆர்.மன்றம் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.