லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி ஆடம்பர வாழ்க்கை போலி ஏ.டி.எம். கார்டு மோசடி கும்பல் மீது புகார்கள் குவிகின்றன
லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி ஆடம்பரமாக வாழ்க்கை நடத்திய போலி ஏ.டி.எம். கார்டு மோசடி கும்பல் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கோவை,
கோவை சிங்காநல்லூரில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி ஒரு கும்பல் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நவசாந்தன் (வயது 29), நிரஞ்சன் (38), தமிழரசன் (26), வசீம் (30), கிஷோர் (25), மனோகரன் (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்கள் 6 பேரும் மோசடி செய்த பணத்தில் சொகுசு கார்கள், விலை உயர்ந்த செல்போன்கள் போன்றவற்றை வாங்கி உள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்பட பல மாநிலங்களுக்கு விமானத்தில் பறந்து சென்றதுடன், அந்தந்த மாநிலங்களிலும் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து மோசடி செய்துள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி தங்களை சினிமா துறையினர் என்றும், சூட்டிங் நடத்த இடம் பார்க்க வந்துள்ளதாகவும் கூறி உள்ளனர். மேலும், பலரது வங்கி கணக்கில் இருந்து எடுத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்த அவர்கள் அழகிகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலுக்கு பின்னணியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த நவசாந்தன், தமிழரசன், நிரஞ்சன் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் மீது புகார்கள் குவிந்து வருகிறது.
சிங்காநல்லூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கடந்த 2–ந் தேதி பணம் திருட்டு போய் இருந்தது. அடுத்த நாள் கோவை லாலி ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.மில் 3 பேர் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அந்த வங்கியின் அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்து இருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கைதான 6 பேரிடம் விசாரணை நடத்திய போது லாலி ரோட்டில் உள்ள ஏ.டி.எம்.மிலும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து போலி ஏ.டி.எம். கும்பலை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கோவை ராமநாதபுரத்தில் உள்ள 2 பெட்ரோல் பங்கில் ஸ்கிம்மர் கருவி மூலம் ரூ.20 லட்சம் மோசடி நடைபெற்றது. கோவையில் மட்டும் இதுவரை 6 வழக்குகள் இவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டு உள்ளன.
இந்த மோசடிக்கு கார்டு ரீடர் மற்றும் ஸ்கிம்மர் கருவிகளை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் முன்பதிவு செய்து வாங்கி உள்ளனர். போலி ஏ.டி.எம். கார்டுக்கான கார்டுகளையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து வாங்கி இருப்பது போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஏ.டி.எம். கார்டு போல் உள்ள கார்டில் தகவல் பதிவு செய்யும் பகுதியில், மடிக்கணியில் பதிவு செய்த தகவல்களை ஏற்றி பின்னர் சுவைப் கருவி மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களில் செருகி பணத்தை சுருட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.