போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: ஒரே நாளில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு


போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: ஒரே நாளில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் போலீஸ் நிலையம் அருகே ஒரேநாளில் 3 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கைலாசம் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு பரிமளா, பத்மா ஆகிய 2 மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். சக்திவேல் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக் கிழமை சக்திவேல் ஊருக்கு வந்தார்.

பின்னர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சக்திவேல் குடும்பத்தினர் சென்றனர்.திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து சக்திவேல் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், வெள்ளி கொலுசுகள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). இவர் சேலத்தில் அச்சகம் நடத்தி வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு நாகராஜ் குடும்பத்துடன் சினிமா பார்க்க வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் நாகராஜ் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 2 தங்க மோதிரங்கள், ரூ.5 ஆயிரம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடினர். அப்போது நாகராஜ் வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்து சுவர் ஏறிக் குதித்து வெளியே தப்பி ஓடி விட்டனர்.

இதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அப்போது மர்ம நபர்கள், முருகன் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகை, பணத்தை திருடிச் சென்றனர்.

ஒரேநாளில் 3 வீடுகளில் நடந்த திருட்டு குறித்து ஓமலூர் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.திருட்டு நடந்த 3 வீடுகளும் போலீஸ் நிலையம் அருகே உள்ளன. இங்கு மர்ம நபர்கள் துணிகரமான முறையில் கைவரிசை காட்டிச்சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story