தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலி வனத்துறையினர் விசாரணை


தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலி வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி பலியானார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த ஜவளகிரி அருகே உள்ள கர்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமாரப்பா (வயது50) விவசாயி. இவர் நேற்று முன்தினம் கால்நடைகளை கிராமத்தின் அருகேயுள்ள தாவரப்பத்தம் வனப் பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். மேய்ச்சல் முடிந்து மாலை கால்நடைகளை அங்கிருந்து வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் கால்நடைகளையும், சின்னமாரப்பாவையும் விரட்டி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பியோட முயன்ற போது தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து யானை ஒன்று அவரை தாக்கி துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் சின்னமாரப்பா அங்கிருந்த பாறை மீது விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவரை காணவில்லை என குடும்பத்தினர் வனப் பகுதிக்கு வந்தனர். அப்போது சின்னமாரப்பா யானை தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜவளகிரி வனச்சரகர் முருகேசன், வனவர் செல்வராஜ், வனப்பாதுகாவலர் முருகன் மற்றும் மல்லேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் உயிரிழந்த விவசாயி சின்னமாரப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜவளகிரி வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானை தாக்கி விவசாயி சின்னமாரப்பா இறந்த தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி மற்றும் வனத்துறை அதிகாரிகள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சின்னமாரப்பாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் அவருடைய குடும்பத்திற்கு இடைகால நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கினர். 

Next Story