புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பெண்கள் போராட்டம்


புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

பூதானஅள்ளி கிராமத்தில் புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பூதானஅள்ளி கிராமத்தில் புதிய மதுக்கடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு மதுக்கடை அமைக்க கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் பூதானஅள்ளி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூதானஅள்ளி கிராமத்தில் மதுக்கடை அமைக்ககூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். கூட்டமாக வந்த பெண்களை தர்மபுரி கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

கலெக்டர் அலுவலகத்திற்குள் கூட்டமாக சென்று மனு அளிக்ககூடாது என்றும், ஒருசிலர் மட்டும் உள்ளே சென்று கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்குமாறும் போலீசார் தெரிவித்தனர். இதற்கு மனு அளிக்க வந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மனு அளிக்க வந்த அனைவரும் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை வைத்திருப்பதால் அனைவரையும் மனுஅளிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் மனு அளிக்க வந்த பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது-

பூதானஅள்ளி கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான மாணவ-மாணவிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்பிற்காக கோவிலூர், லளிகம், நார்த்தம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு தினமும் சென்று வருகிறார்கள். 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்காக தினமும் வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் பூதானஅள்ளி கிராமத்தில் உள்ள பஸ்நிறுத்தத்திற்கு மிக அருகிலேயே புதிய மதுக்கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு மதுக்கடை அமைத்தால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் மதுக்கடை அமைக்கப்படும் இடத்தை தினமும் கடந்து செல்லும்போது கேலி-கிண்டல், பாலியல் சீண்டல் ஆகியவற்றிற்கு ஆளாக நேரிடும். குறிப்பாக இரவு நேரங்களில் அந்த வழியாக பெண்கள் நடமாட முடியாத நிலை உருவாகிவிடும்.

பெண்கள், மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த பகுதியில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று ஏற்கனவே 2 முறை கோரிக்கை மனு அளித்து உள்ளோம். தற்போது மீண்டும் கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளோம். எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் புதிய மதுக்கடை அமைக்கும் திட்டத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்துவோம். அதையும் மீறி எங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைத்தால் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அமைதியான முறையில் மனு அளிக்க எங்களை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story