முயல் வேட்டையாட எதிர்ப்பு: இருபிரிவினர் இடையே மோதல்; பொதுமக்கள் சாலை மறியல்


முயல் வேட்டையாட எதிர்ப்பு: இருபிரிவினர் இடையே மோதல்; பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே முயல் வேட்டையாட எதிர்ப்பு தெரிவித்ததால் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஒரு பிரிவிவை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மலையாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் போச்சம்பள்ளி அருகே உள்ள மாடத்தானூர் கிராமத்திற்கு முயல் வேட்டையாட சென்றனர். இதற்கு இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு பிரிவினரை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் மாடத்தானூரை சேர்ந்த சஞ்சாய்காந்தி என்ற வாலிபர் காயம் அடைந்தார்.

இதையறிந்ததும், மாடத்தானூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மலையாண்டஅள்ளி கிராமத்திற்கு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து சென்று கிராமமக்களை ஊர் எல்லையில் தடுத்து நிறுத்தினர். அப்போது வாலிபரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தார்.

சாலை மறியல்

இதையடுத்து திரும்பி சென்ற கிராமமக்கள் மத்தூர்- திருப்பத்தூர் சாலையில் அங்கம்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மோதல் ஏற்படாமல் இருக்க இந்த 2 கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story